தனிநபர் மசோதாக்களை பொறுத்தவரையில் இந்த மக்களவையில் குளிர்காலக் கூட்டத்தொடர் வரை மொத்தம் 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு உறுப்பினர்கள் முக்கியமான பிரச்சினைகளில் தனி நபர் மசோதா கொண்டு வரலாம். 17-வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு கடந்த இரண்டு கூட்டத்தொடரிலும் சேர்த்து 146 தனிநபர் மசோதாக்கள் அகில இந்திய அளவில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இதில் தமிழகத்திலிருந்து 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக எம்.பி.க்களில் வசந்தகுமார், கனிமொழி, நவாஸ்கனி ஆகியோர் தலா 2 தனிநர் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், திமுக எம்.பி.யுமான ரவிக்குமார் ஒரு மசோதா தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி. கனிமொழி குற்றவியல் சட்டத்திருத்த மசோதாவையும், மரண தண்டனை ரத்து செய்யக்கோரும் மசோதாவையும் தனிநபர் மசோதாக்களாக கொண்டு வந்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மீனவர்கள் நல மசோதாவையும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலை மற்றும் தொழில்நுட்ப கல்வியை கட்டாயமாகவும், இலவசமாகவும் வழங்ககோரும் மசோதவையும் தாக்கல் செய்துள்ளார்.
ராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக் கட்சி எம்.பி. நவாஸ் கனி, தேசிய விவசாயம் மற்றும் விவசாயிகள் ஆணைய மசோதாவையும், மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகளை தேசியமயமாக்கும் மசோதாவையும் தாக்கல் செய்துள்ளார்.
விழுப்புரம் தொகுதி திமுக எம்.பி. ரவிக்குமார் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான தனிநபர் மசோதா கொண்டு வந்துள்ளார்.

