தமிழக ஆட்சிக்கு நல்லாட்சி பத்திரம்- மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் சந்தேகம்

192 0

மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதல் இடம் என்று தரவரிசைப் பட்டியல் வெளியிட்டுள்ள மத்திய பா.ஜ.க அரசு மீது சந்தேகம் வருவதாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘குடிப்பதற்கு எல்லோருக்கும் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் இல்லை’ ‘பொதுமக்கள் நடப்பதற்கு நல்ல சாலை வசதிகள் இல்லை’ ‘பெண்களுக்குத் தேவையான பாதுகாப்பு இல்லை’ வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ‘மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதல் இடம்’ என்று மத்திய பா.ஜ.க அரசு தரவரிசைப் பட்டியல் வெளியிட்டிருப்பது, ‘கும்பி எரியுது, குடல் கருகுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா’ என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது.

முதலில் மத்திய அரசின் இந்தத் தரவரிசைப் பட்டியல் ஏன் திடீரென்று வெளியிடப்பட்டுள்ளது? இந்த தரவரிசைப் பட்டியலுக்கு மத்திய அரசில் யார் ஒப்புதல் கொடுத்தது? பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையா? துறைகளின் கீழ் உள்ள அளவுகோல் குறித்த விவரங்களை அளித்தது யார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத, ஒரு ‘மர்ம ஆய்வறிக்கை’ அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

ஆனால் உண்மை என்ன? ‘மூன்றாண்டு கால எடப்பாடி பழனிசாமியின் அரசுக்கு ‘நல்லாட்சி சாயம் பூசி’ கூட்டணி தர்மத்தை நிலை நாட்டியிருக்கிறதோ மத்திய பா.ஜ.க. அரசு என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு, குறிப்பாக நடுநிலையாளர்களுக்கு எழுகிறது. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 9 துறைகளில் இருதுறைகளில் மட்டுமே ‘முதலிடத்தில் இருப்பதாக’ உள்ள தரவரிசைப் பட்டியலில் எப்படி தமிழகம் முதலிடத்திற்கு வந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது? எந்தவித விளக்கமோ, விவரமோ இல்லை.

ஆனால், அதிமுக அரசுக்கு அளித்துள்ள இந்த சான்றிதழால், மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தின் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஜாமீன் கொடுக்கும் அமைப்பாக மாறியிருக்கிறது. ‘நீதி நிர்வாகம் மற்றும் பொதுப்பாதுகாப்பில்’ முதலிடம் என்று மத்திய அரசு கண்டுபிடித்திருக்கிறது.

சட்டம் ஒழுங்கு சீரழிவில் அவதிப்படும் மக்களுக்கு அதிமுக நல்லாட்சி வழங்கி உள்ளது என்று எப்படி மத்திய அரசு கண்டுபிடித்தது?

‘பொது உள்கட்டமைப்பில் தமிழகம் முதலிடம்’ என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வு வரம்பிற்குள் சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகள் போன்றவை முக்கியமாக வருகின்றன. ‘தமிழகம்தான் உள்ளாட்சித் தேர்தலே மூன்று வருடங்கள் நடத்தாத ஒரே மாநிலம்’ என்று மத்திய அமைச்சரே பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதனால் மாநிலத்திற்கு வர வேண்டிய உள்ளாட்சி நிதியை மத்திய அரசே நிறுத்தி வைத்துள்ளது. ‘சாலை, குடிநீர், கழிப்பிட’ வசதிகளை அளிப்பதில் முக்கியப் பங்காற்றும் உள்ளாட்சி அமைப்புகளே இல்லாத போது எப்படி இந்த துறையில் தமிழகம் முதலிடத்திற்கு வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது?
பாஜக

தொழில் வளர்ச்சியில் கடைசி இடத்திற்குத் தள்ளப்படும். வேலை இல்லாத் திண்டாட்டத்தில் முதலிடத்திற்கு வரும். ‘நல்லாட்சியில்’ பூஜ்ஜியத்திற்கும் கீழே ஏதாவது ஒரு ‘வரையறை’ செய்ய முடியுமென்றால், அந்த இடத்திற்குச் சென்று விடும். இதுதான் இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள அதிமுக ஆட்சியின் அவலமான நிலைமை.

அதில் ‘முதலிடம்’ என்று எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு தர நிர்ணயம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசால் எப்படி முடிந்தது? வேறு எந்த ஒரு மத்திய அரசும் இப்படியொரு தர நிர்ணயப் பரிசோதனையில் அதிமுக ஆட்சியை ஈடுபடுத்தி மத்திய அரசின் மீதான நம்பகத்தன்மையைக் கெடுத்து, தரம் தாழ்த்திக் கொள்ள முன்வந்திருக்காது.

மோசமான அதிமுக ஆட்சியைத் தூக்கி நிறுத்த, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முனைந்திருக்கிறது என்றால் பா.ஜ.க. அரசுக்கும் இங்குள்ள அதிமுக அரசுக்கும் ‘மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான’ உறவு என்பதையும் தாண்டி ஏன், ‘கூட்டணி உறவுக்கும்’ அப்பாற்பட்ட நெருக்கமான ஒரு உறவாக, ‘அதிமுக பா.ஜ.க.’ உறவு அமைந்திருக்கிறது என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தரவரிசைப் பின்னணியைப் பற்றி, தமிழக மக்களுக்கு எழுந்துள்ள அய்யப்பாடுகளைப் போக்கிட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.