திருவள்ளூர் அருகே ஓட்டுப்பெட்டியை தூக்கி சென்று எரித்த கும்பல்

361 0

திருவள்ளூர் அருகே பாம்பரம்பாக்கம் கிராமத்தில் வாக்குச்சாவடி முன்பு ஓட்டுப்பெட்டியை தூக்கி எறிந்து ஓட்டுச்சீட்டுகளுக்கு கும்பல் தீ வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாம்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 3 வாக்குச்சாவடியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது.

மதியம் 12.30 மணியளவில் 50 பேர் கும்பல் திடீரென வாக்கு மையத்திற்குள் புகுந்தனர். அவர்கள் 83, 84-வது வாக்குச்சாவடிக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். திடீரென 83-வது வாக்குச்சாவடியில் இருந்த ஓட்டுப்பெட்டியை வெளியில் தூக்கிக் கொண்டு ஓடினர்.

பின்னர் வாக்குச்சாவடி முன்பு ஓட்டுப்பெட்டியை தூக்கி எறிந்து ஓட்டுச்சீட்டுகளுக்கு தீ வைத்தனர்.

இதைத்தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்தபோது அங்கு போதுமான போலீசார் பாதுகாப்பில் இல்லை. தகவல் அறிந்ததும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். 83, 84 வது வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.

85-வது ஓட்டுச்சாவடியில் மட்டும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது.