சசிகலாவுக்கு எதிராக வழக்கு தொடருவேன்- ஜெ. தீபா

200 0

ஜெயலலிதா சொத்துக்களுக்கு சொந்தம் கொண்டாடும் சசிகலாவுக்கு எதிராக வழக்கு தொடருவேன் என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் போயஸ் இல்லம், சசிகலா, மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், சசிகலா நிர்வாகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அந்த ஆவணங்களை ஆய்வு செய்த வருமான வரித்துறையினர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.1,900 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை கண்டு பிடித்தனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சொத்துக்கள் வாங்கப்பட்டதாகவும், கடன் வழங்கப்பட்டதாகவும் கூறிய வருமான வரித்துறை ஜெயிலில் உள்ள சசிகலாவிடம் விளக்கம் கேட்டது.

இது தொடர்பாக சசிகலாவின் ஆடிட்டர் விளக்க கடிதத்தை கடந்த 11-ந்தேதி வருமான வரித்துறைக்கு அனுப்பினார். அந்த கடிதத்தில் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ஜெயலலிதாவுடன் பங்கு தாரராக இருந்த பல்வேறு நிறுவனங்கள், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால் தனக்கே சொந்தம், அந்த நிறுவனங்கள், வர்த்தகம் மற்றும் இதர வகைகளில் இருந்தே தனக்கு வருமானம் வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

சசிகலாவின் விளக்கம் தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியதாவது:-
சசிகலா

சசிகலாவின் விளக்கம் தொடர்பாக நாங்கள் கட்டாயம் நீதிமன்றத்தை நாடுவோம். ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி இருப்பதால் பங்குதாரர் தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் சசிகலா சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக பங்குதாரர் ஒப்பந்தங்களை காட்ட வேண்டும்.

ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் என்ற அடிப்படையில் ஏற்கனவே 2 வழக்குகளை சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ளோம். அந்த வழக்குகளின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.

ஜெயலலிதாவுக்கு எந்த ஒரு சட்டப்பூர்வ வாரிசுகளும் இல்லை என்பது போல தற்போது இந்த அறிக்கையை சசிகலா வெளியிட்டுள்ளார். அவர்கள் எந்தெந்த நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருந்தனர். அதன் விவரம், சொத்து மதிப்பு, தற்போதைய நிலை குறித்து அவர் விளக்க வேண்டும். இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.