எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட ட்ரம்ப் செவிட்டுத் தன்மை மற்றும் உயிராபத்தான நோய் என்பனவற்றால் துன்பப்படும் அதேசமயம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு ஒரு படுகொலை முயற்சியை தடுக்க வேண்டியிருக்கும் என எதிர்காலம் குறித்து கணித்துக் கூறுவதில் வல்லமையைக் கொண்ட பல்கேரியாவைச் சேர்ந்த கண்பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வக்னா எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட செப்டெம்பர் 11 ஆம் திகதி தாக்குதலை சரியாக கணித்துக் கூறியவராக கருதப்படும் பாபா வக்னா, ஐரோப்பாவானது எதிர்வரும் ஆண்டில் முஸ்லிம் தீவிரவாதிகளிடமிருந்தான இரசாயனத் தாக்குதலொன்றை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கண்பார்வையற்ற பாபா வக்னா 1996 ஆம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் மரணமாகியிருந்த போதும் அவரால் எதிர்வரும் 5079 ஆம் ஆண்டுவரை நிகழவுள்ள முக்கிய சம்பவங்கள் குறித்து எதிர்வுகூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரால் எதிர்வரும் வருடம் தொடர்பில் எதிர்வுகூறப்பட்டவைகள் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவுக்கு கவலை தருவனவாக உள்ளன.
2020ஆம் ஆண்டில் ட்ரம்பின் மூளையில் கட்டி ஏற்பட்டு அவரது காது செவிடாவதுடன் அவர் அந்த நோய்ப் பாதிப்பால் இறக்க நேரிடலாம் என பாபா வக்னா எதிர்வு கூறியுள்ளதாக அவரது எதிர்வுகூறல்களை பரிசீலனைக்குட்படுத்தியவர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் எதிர்வரும் ஆண்டில் முஸ்லிம் தீவிரவாத படையொன்று இரசாயன ஆயுதத்துடன் ஐரோப்பாவுக்குள் ஊடுருவும் என பாபா வக்னா எதிர்வு கூறியுள்ளார்.
அதேசமயம் விளாடிமிர் புட்டினை ரஷ்யாவில் வைத்துப் படுகொலை செய்வதற்கு முயற்சியொன்று மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ள பாபா வக்னா, அந்தப் படுகொலை முயற்சியில் புட்டின் உயிர் பிழைப்பாரா இல்லையா என்பது தொடர்பில் எதனையும் குறிப்பிட்டுக் கூறவில்லை.
ஆனால் இந்த 2019ஆம் ஆண்டு தொடர்பில் கடந்த ஆண்டில் எதிர்வு கூறப்பட்டவையும் மேற்படி எதிர்வுகூறலை ஒத்தனவாகவுள்ள நிலையில் அவ்வாறான அசம்பாவிதங்கள் எதுவும் இந்த ஆண்டில் இடம்பெறவில்லை என்பது டொனால்ட் ட்ரம்பிற்கும் புட்டினுக்கும் ஆறுதலளிப்பதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாபா வக்னா தனது 12 ஆவது வயதில் பாரிய புயல் தாக்கமொன்றின்போது மர்மமான முறையில் தன் கண் பார்வையை இழந்திருந்தார். புயலில் சிக்கி காணாமல்போன அவரை பல நாட்கள் கழித்து அழுக்கால் கண்கள் மூடப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்த நிலையில் அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்து மீட்டனர். அதன் பின்னரே அவருக்கு எதிர்காலம் தொடர்பில் எதிர்வு கூறும் ஆற்றலும் மற்றவர்களைக் குணப்படுத்தும் வல்லமையும் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது.
2028ஆம் ஆண்டுக்குள் உலகம் பட்டினியால் முடிவுக்கு வரும், 2256 ஆம் ஆண்டுக்குள் செவ்வாய்க்கிரகத்திலான காலனித்துவ குடியேற்றங்கள் அணு ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும், 2341 ஆம் ஆண்டுக்குள் உலகம் உயிர் வாழ்க்கைக்கு உகந்ததற்ற கோளாக மாறும் எனவும் பாபா வக்னா எதிர்வு கூறியுள்ளார்.
அதேசமயம் பாபா வக்னாவால் கூறப்பட்ட எதிர்வு கூறல்களுக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும் அவை ரஷ்ய சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்பட்ட வதந்திகளாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் இறுதி ஜனாதிபதியாக பராக் ஒபாமா இருப்பார் என்ற பாபா வக்னாவின் எதிர்வுகூறலை 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்று பொய்யாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

