மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 14ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு

426 0

மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 14ஆவது நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் இந்த நினைவு நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் திருவுருவப் படத்திற்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் கி.துரைராஜசிங்கம் மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து ஏனையோர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையின்போது மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.