பெண்களை மரியாதையுடன் நடத்துவோம்: 22 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி

418 0

டெல்லியில் நேற்று திங்கட்கிழமை முதல்வர் கேஜ்ரிவால் தலைமையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் இந்த உறுதிமொழியை மேற்கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்பாக டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவால், ”பெண்களிடம் தவறாக நடக்கக் கூடாது என்று பாடசாலைகளில் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். இதற்காக பாடசபாலைகளில் மாணவர்களிடம் உறுதிமொழி பெற உள்ளோம். எந்தவொரு பெண்ணிடமும் என்றும் தவறாக நடக்க மாட்டோம் என்ற உறுதி பெறப்படும். இந்த உறுதிமொழி ஒருமுறை மட்டுமே பெறப்படாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.

அதேபோல வீடுகளில் இருக்கும் ஒவ்வொரு தாயும், தனது மகனிடம் இதுகுறித்து விரிவாகப் பேச வேண்டும். பெண்களுக்கு எதிராக எந்தவொரு குற்றத்தையும் இழைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட முடியாது என்று பெண்கள் உணர்த்த வேண்டும். அப்படித் தவறு செய்யும்பட்சத்தில் இந்த சமூகம் மட்டுமல்ல குடும்பமும் சேர்ந்தே அவனைப் புறக்கணிக்க வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காணொளிக் கருத்தரங்கம் மூலம் டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், பெண்களை மதித்து நடப்போம் என்று 22 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதேபோல, மாணவிகள் தங்களின் வீடுகளில் உள்ள சகோதரர்களிடம் உறுதிமொழி பெற வேண்டும் என்று கேஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.

உறுதிமொழி குறித்த மாணவர்களின் அனுபவங்களையும், குடும்பத்தினரின் உணர்வுகளையும் வகுப்பறையில் ஒரு மணிநேரக் கலந்துரையாடலாக நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்குக் அறிவுறுத்தப்பட்டுள்ளது.