இனவாதப் போக்கை தெற்கிலுள்ளவர்கள் கைவிட வேண்டும் – சிவாஜிலிங்கம்

237 0

தமிழ் மக்களை அல்லது தமிழ் தலைவர்களை கைது செய்வோம் என்று அச்சுறுத்துவது அல்லது விரட்டியடிப்போம் என்று கூறுகின்ற இனவாதப் போக்கை தெற்கிலுள்ளவர்கள் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்

நீங்கள் வாள் எடுத்தால் நாங்களும் வாள் எடுக்கத் தயங்கமாட்டோம். ஆனாலும் அந்த நிலைமைக்கு எங்களையும் நிர்ப்பந்திக்காதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென்று தெற்கில் எழுப்பப்படுகின்ற கோரிக்கை மற்றும் வாள் கொண்டு விரட்டியடிப்போம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறிய விடயம் தொடர்பிலும் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்த கருத்திற்கு எதிராக தெற்கிலுள்ள பௌத்த பீடங்களும் சில அரசியல்வாதிகளும் தமது கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர். அதிலும் அவரைக் கைது செய்ய வேண்டுமென்றும் கோருகின்றனர். இதற்கு மேலாக வாளால் விரட்டியடிப்போம் என்கின்றனர்.

இந்த நிலைமைகள் அல்லது இந்தக் கருத்துக்கள் என்பது இன்றைக்கு விக்கினேஸ்வரன் ஐயாவிற்கு எதிராக சொல்லப்படுகிறது. ஆனால் இது தான் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக தொடர்ந்தும் இந்த நாட்டில் நடக்கிறது. குறிப்பாக சில காலங்களுக்கு முன்னர் என்னைக் கூட அழைத்து விசாரணை செய்திருந்தனர்.

ஆகவே முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா போன்றவர்களுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நீங்கள் வாள் கொண்டு விரட்டியடிக்கப் முனைந்தால் நாங்கள் கை கட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்.

நீங்கள் சொல்வது போன்று துட்டகைமுனுவின் வாள் எடுத்து  வீசினால் நாங்கள் சங்கிலியன் எல்லாளன், பண்டாரவன்னியன் போன்றவர்களின் கேடயங்களை எடுத்து தற்காப்பு செய்வோம்.

அப்போதும் நீங்கள் நிறுத்தாமல் இந்த நிலைமைகள் தொடர்ந்தால் நாங்கள் அவர்களின் வாள்களை எடுப்பதற்கும் நாங்கள் தயங்க மாட்டோம் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறோம். ஆகையினால் அதற்கு எம்மை நிர்ப்பந்திக்காதீர்கள் என்றே கோருகின்றோம்.

இந்த நாட்டில் மீண்டும் இரத்த அறு ஓடுவதற்கு தள்ளாதீர்கள், நாங்கள் எங்களுக்கான தீர்வையே தொடர்ந்தும் கோருகின்றோம். அதே நேரத்தில் எங்களுக்கு இருக்கின்ற உரிமைகளையும் வலியுறுத்துகின்றோம்.

ஆகவே எமக்கான தீர்வை வழங்க வேண்டும். அவ்வாறு தீர்வை வழங்காததால் தான் இவ்வாறான பிரச்சனைகள் தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றதென்பதையும் சுட்டிக்காட்டுகிறோம் என்றார்.