உலகில் வாழும் வயதான தம்பதியராக கின்னஸ் சாதனை படைத்த ஜான் மற்றும் சார்லோட் ஹென்டர்சன் இணையர் இன்று தங்களது 80-வது திருமணநாளை கொண்டாடுகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்குட்பட்ட ஆஸ்டின் நகரின் அருகேயுள்ள லான்ஹார்ன் கிராமத்தில் வசிக்கும் ஜான்(106) மற்றும் சார்லோட் ஹென்டர்சன்(105) தம்பதியர் உலகில் வாழும் வயதான தம்பதியராக ’கின்னஸ் சான்றிதழ்’ மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் இணைபிரியாத தம்பதியர்களாக வாழும் இவர்கள் இன்று தங்களது 80-வது திருமணநாளை கொண்டாடுகின்றனர். திருமண உறவுகள் நீடித்து தொடர்வதற்கான ரகசியமாக ’காலத்துக்கேற்ப நவீனமயமாதல்’ ‘விட்டுக்கொடுத்தல்’ என்னும் தத்துவங்களை இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஜோடியை பற்றிய விபரமறிந்த நட்பு வட்டாரங்கள், இவர்கள் கடந்தகால கதைகளைப்பற்றி பேசுவதுண்டு. ஆனால், கடந்த காலத்துக்குள்ளேயே மூழ்கி கிடப்பதில்லை என கூறுகின்றன.
இத்தனை பெருமைக்குரிய இந்த தம்பதியருக்கு குழந்தைகள் ஏதும் பிறக்கவில்லை. அதை ஒரு மனக்குறையாகவே கருதாமல் இருவரும் 80 ஆண்டுகளாக இல்லற வாழ்க்கையை தொடர்கின்றனர் என்பது இவர்களின் சிறப்பம்சமாகும்.

