குடியுரிமை திருத்த சட்டத்துக்கு 62 சதவீத மக்கள் ஆதரவு – கருத்துக்கணிப்பில் தகவல்

276 0

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் 62 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளன.

இது ஒருபுறம் இருக்க, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ‘ஏ.பி.பி. நியூஸ்’ மற்றும் ‘சி-வோட்டர்’ நிறுவனங்கள் இணைந்து கடந்த 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இந்த கருத்துக்கணிப்பை நடத்தின.

இதில் நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதைப்போல அசாம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் முஸ்லிம் பிரிவினரில் இருந்து தலா 500 பேரிடமும் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள் அதாவது 62 சதவீதம் பேர் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். 37 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என 56 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். 32 சதவீதம் பேர் முஸ்லிம்களுக்கு எதிரானது எனக்கூறினர்.

அதேநேரம் முஸ்லிம்களில் 63 சதவீதம் பேர் சட்டத்துக்கு எதிராகவும், 35 சதவீதம் பேர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர். இந்துக்களில் 67 சதவீதம் பேர் ஆதரவையும், 32 சதவீதம் பேர் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். பிற மதத்தினர் 62.7 சதவீதம் பேர் ஆதரவும், 36 சதவீதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

அசாமை பொறுத்தவரை இந்த சட்டத்தை 68.1 சதவீதம் பேர் எதிர்த்து உள்ளனர். 35.5 சதவீதம் பேர் ஆதரித்தும் கூறியுள்ளனர். ஒட்டுமொத்தமாக வடகிழக்கு மாநிலங்களில் 50.6 சதவீத ஆதரவும், 47.4 சதவீத எதிர்ப்பும் காணப்பட்டது.

இதைப்போல நாட்டின் கிழக்குப்பகுதியில் ஆதரவு 57.3 சதவீதம் (எதிர்ப்பு 42.7 சதவீதம்), மேற்கு பகுதியில் 64.2 (35.4), வடக்கு பகுதியில் 67.7 (31.2), தெற்கு பகுதியில் 58.5 (38.8) சதவீதம் என்ற வகையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு மக்களின் அங்கீகாரம் கிடைத்து உள்ளது.

இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானதா? என்ற கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் தலா 47 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர். 6 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

இந்த சட்டத்தால் நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து பொருளாதாரம் பாதிக்கப்படும் என 64 சதவீதம் பேர் அச்சம் தெரிவித்தனர். ஆனால் இந்த சட்டத்தால் மக்கள் தொகை அதிகரிக்கவோ, பொருளாதாரம் பாதிக்கவோ வாய்ப்பில்லை என 34 சதவீதம் பேர் கருத்து கூறினர்.