போர் வெற்றியைக் கற்றலும் இனவாதத் தீயில் கருகுதலும்!

492 0

decabfa7c0644f0bb92eb96cd0741c17e799f341இறுதிப் போரையும் அதில் அரசாங்கப் படைகள் பெற்றுக் கொண்ட வெற்றியையும் பாடசாலைப் பாடங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியிருக்கின்றார். வரலாறு எப்போதுமே வெற்றியாளர்களின் பக்கத்திலிருந்து எழுதப்பட்டு வந்திருக்கின்றது. அது, ‘வெற்றியாளர்களின் நீதி’ என்கிற ஏக மனநிலையைக் காலம் காலமாக மக்களிடம் கடந்தி வந்திருக்கின்றது. தோற்கடிக்கப்பட்டவர்கள் கோரிய நீதி என்ன? அல்லது தோல்வியடைவோம் என்று தெரிந்தும் ஏன் அவர்கள் போரிட்டார்கள்? மாண்டுபோனார்கள்? என்பது பற்றியெல்லாம் பெரிதாக யாருமே கரிசனை கொள்வதில்லை. அதுவே, ‘இராமாயணம், மகாபாரதம்’ உள்ளிட்ட இதிகாசங்களில் தொடங்கி நம்மீது வரலாறு என்று திணிக்கப்படுகின்ற ‘மகாவம்சம்’ போன்ற தொகுப்புக்கள் வரையிலும் தொடர்ந்து வந்திருக்கின்றது.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகள் கடந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டன. அந்த அமர்வுகளில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளைக் காட்டிலும் மிகமிக வீரியமான கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் சாமானிய மக்களே பெரிதும் வெளியிட்டார்கள். தாங்கள், எவ்வாறு மூர்க்கம் பெற்ற இனவாத- மதவாத நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டு, அதனையே வாழ்க்கை பூராவும் பிரதிபலிக்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றது என்பதையும், அவை எவ்வாறான தீங்குகளைத் தம்மிடையே விதைத்திருக்கின்றன என்பதையும் மிக யதார்த்தமான உரையாடல்களின் மூலம் பதிவு செய்திருக்கின்றார்கள். அவை, வரலாற்று வெற்றிப் பெருமிதங்கள், தேசங்கள் மீதான அபிமான பிம்பங்களினால் தொடர்ந்த பேரழிவு, மத ரீதியிலான அடிப்படைகளோடு தோற்றம் பெற்ற வன்மங்கள், அடக்குமுறைகள், யுத்தத்தின் பின்னரான இழப்புக்கள், சீரழிவுகள் மற்றும் நிலைமாறு கால நீதியின் அவசியம் பற்றியவையாக இருந்தன.

மாத்தளையில் நடத்தப்பட்ட கருத்தறியும் செயலணியின் அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட நடுத்தர வயதில் இருக்கும் மூன்று பேரின் கருத்துக்களை இங்கு சுட்டிக்காட்டுவது கட்டுரையின் தொடர்ச்சிக்கு உதவும். (பெயர் விபரங்களை பாதுகாப்பு நோக்கங்களுக்காக தவிர்த்திருக்கிறேன்.)

அரசாங்க ஊழியர் ஒருவர், “எனக்கு 40 வயது; சிங்கள மொழியிலேயே கற்றேன்; தெளிவாகச் சிங்களம் பேசத் தெரியும்; மதப் பிரிவினைகளினால், அதாவது மதத்தினை நடைமுறைப்படுத்தும் விதத்தினால்த்தான் பிரச்சினை வருகிறது. யார் தமிழ், யார் சிங்களம்? என்று எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், எமது பாடப் புத்தகங்களில் ஆண்டு இரண்டு அளவில், துட்டகைமுனு ஈட்டியுடன் எல்லாளனைத் தாக்குவதனையும் எல்லாளன் தன் தலையினைக் குனிந்து தோல்வியை ஒத்துக்கொள்வதையும் பார்த்தோம். ஆகவே, எங்களுக்கும் வேறு இனத்தைச் சேர்ந்த வகுப்பு மாணவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டால், அந்த வகுப்பு மாணவர்கள் எல்லாளனின் படத்தை அடிப்பதை (குத்துவதை) பார்த்திருக்கிறேன். இதை என் கண்களால் பார்த்திருக்கிறேன்.

அப்பொழுதே எனக்குத் தோன்றியது இந்தப் புத்தகங்கள் தவறான உதாரணத்தைக் காட்டுகின்றன என்று. சின்ன வயசில் இருந்து ஒற்றைப்படையாகவே சிந்திக்க நெறிப்படுத்தப்பட்டதனால் வந்த விளைவு இது. ஆண்டு இரண்டு பாடப் புத்தகத்தினால் உருவாக்கப்பட்ட மனநிலையே இன்னும் உள்ளது. இதனால் நான் சாகும் வரைக்கும் இந்தத் தலைமுறை இப்படியேதான் இருக்கும்; என் பிள்ளைக்கு இந்தக் கதையைச் சொன்னால் அது தொடர்ந்து கொண்டே இருக்கும். எப்போது முடிவு காண்பது?”.

கிராமிய மகளிர் அமைப்பின் தலைவி, “பெரியவர்களுக்குத் தான் இன நல்லிணக்கம் பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டும். எல்லாளன் கதையை சிறுவர்களாகக் கேட்டபோது எமக்குள் கோபம் இருந்தது. எல்லாளன் ஒரு கொடிய அரசன் என்றும், அவன் எமது விகாரைகளையும் மற்ற வழிப்பாட்டிடங்களையும் அழித்தான் என்றும் எமக்குச் சொல்லப்பட்டது. அதனால் சின்ன வயசில் இருந்தே எமக்கு அந்த அரசன் மீது வெறுப்பு இருக்கின்றது. அது அப்படியே முழுத் தேசத்துக்குமானதாக மாறிவிடுகின்றது. இது சிறுவர்களின் மனநிலை; இதை மாற்ற வேண்டும்”.

ஒரு தாய், “சிங்கள – பௌத்த மொழிமூல ஊடகங்கள் எமக்குப் பௌத்த சிலைகள் இங்கேயும் அங்கேயும் உடைக்கப்படுகின்றன என்று சொல்கின்றன. நான் இதற்கு எதிர்தான்! ஆனால், ஊடகம் அவ்வாறுதான் காட்டுகின்றது. இப்படித் தெற்கிலே செய்வதற்கு ஏன் அனுமதிக்கிறீர்கள். இதனால்தான் வெறுப்புத் தெற்கில் பரவுகின்றது. நானும் தெற்கினை சேர்ந்தவர் தான். எனக்கும் இந்த வலி இருக்கின்றது”.

சிறுவர்களாக இருக்கும் போது வரலாறு என்ற போர்வையில் எமக்குள் இறக்கி வைக்கப்பட்ட இனக்குரோத சிந்தனைகளையும், ஊடகங்கள் எவ்வாறு இனவாதத்தை எண்ணெய் ஊற்றி வளர்த்து வருகின்றன என்பதையும் மேற்கண்ட மூன்று பேரின் கருத்துக்களும் முன்வைக்கின்றன. இது, தெற்குக்கு மாத்திரம் உரித்தானது அல்ல! வடக்குக்கும் – கிழக்குக்கும் உரித்தானதுதான். ‘வெற்றிவாதம்’கோலோச்சும் போது, யாருக்கு எதிரானது அந்த ‘வாதம்’ என்கிற அடிப்படையில், தங்களை தோல்வியாளர்களின் தொடர்ச்சி என்று கருதும் தரப்பிற்குள்ளும் தாக்கங்களை ஏற்படுத்தி, இனரீதியிலான முனைப்புப் பெறுவதையும் குரோதங்களின் போக்கினை தக்க வைப்பதனையும் நீடிக்கச் செய்யும்.

இப்போதும், மஹிந்த ராஜபக்ஷ பாடசாலைப் பாடங்களில் இணைக்கக் கோரும் போர் வெற்றி வரலாறும் இதன் தொடர்ச்சியேயாகும். தன்னை நவீன துட்டகைமுனுவாகத் தக்க வைத்து, எதிர்கால அரசியலை முன்னோக்கி நகர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கருதுகின்றார். அதற்காக, அவர் இறுதிப் போரில் முன்னின்ற இராணுவ அதிகாரிகளையும் கட்டளைத் தளபதிகளையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு, இன்னமும் வெற்றியின் நாயகன் பிம்பத்தைத் தக்க வைக்க நினைக்கின்றார்.

இறுதிப் போர் முடிவுக்கு வந்த போது மஹிந்த ராஜபக்ஷவை நவீன துட்டகைமுனுவாக சித்தரிப்பதில் தென்னிலங்கை ஊடகங்களும், வரலாற்றாசிரியர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டவர்களும், சில சிரிப்பு நடிகர்களும் கூட மூர்க்கமாக ஈடுபட்டனர். ஆனால், போர் வெற்றி மாத்திரம் வயிற்றுக்கு சோறு போடாது என்கிற நிலையில், நவீன துட்டகைமுனு தூக்கியெறியப்பட்டார். வரலாறு பூராவும் யாரும் இறுதி வரையில் வெற்றியாளர்களாக இருந்து வந்ததில்லை; அதற்கு மஹிந்த ராஜபக்ஷவும் விதிவிலக்கல்ல. ஆனால், வெற்றி பெற்றதும் அவர்கள் எழுதிய நீதியும் அது சார் வரலாறும் காலம் கடத்தும் நீட்சி பெற்றிருக்கின்றன என்பது அச்சுறுத்தும் உண்மை.

இறுதிப் போர் வெற்றிக்குப் பின்னர் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எழுதிய ‘கோத்தாவின் போர்’, இறுதிப் போரில் ஒரு படைப்பிரிவினை வழிநடத்திய மேஜர் காமல் குணரத்ன எழுதிய ‘நந்திக்கடலுக்கான பாதை’, அப்போதைய இராணுவத்தளபதி சரத் பொன்சேகா எழுதப் போவதாக சொல்லப்படும் புத்தகம் உள்ளிட்ட எல்லாமும் தங்களுடைய தனிப்பட்ட அனுபவங்கள், அரசியல் மற்றும் தேவைகள் சார்ந்தே வரலாற்றினை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பிக்கின்றது. அதில், பல மஹிந்த ராஜபக்ஷவுக்கான அபிமானத்தினையும், நவீன துட்டகைமுனு என்கிற விடயத்தையும் தக்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்யலாம். ஆனால், இறுதிப் போரில் கொல்லப்பட்ட 6,000த்தினை அண்மித்த இராணுவ வீரர்களின் குடும்பங்களின் நிலை பற்றியோ, அவயங்களை இழந்துவிட்ட ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் எதிர்காலம் பற்றியோ யாருமே உரையாடப் போவதில்லை. அது, வரலாற்றிலும் சேர்க்கப்படாது. போர் வெற்றிகள் அனைத்துமே தனிமனிதர்களின் வெற்றிகளாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. போர் வெற்றியின் உருவாக்கத்தில் மூர்க்கமாகப் பங்களித்தவர்களின் நிலையே அப்படியிருக்கும் போது, தோற்கடிக்கப்பட்டவர்களின் கோரிக்கை அல்லது அவர்கள் எதிர்நோக்கிய நீதி பற்றியெல்லாம் வரலாறு பதிவு செய்யுமா? இல்லை! நிச்சயமாக இல்லை!

அப்படியான நிலையில், தனிநபர்களின் வெற்றியைப் பிரசாரப்படுத்தும் வரலாற்றினை பாடசாலைப் பாடங்களில் வைத்து இனக்குரோதங்களின் அளவினை நெய்யூற்றி வளர்க்க வேண்டிய தேவை ஏதும் இல்லை. ஏற்கெனவே திணிக்கப்பட்ட எல்லாளன் – துட்டகைமுனு வரலாறும் அதுசார்ந்த புனைவுகளும் ஏற்படுத்திவிட்ட பேரழிவுமே பல நூற்றாண்டுகளுக்கு போதுமானதாக இருக்கின்றது.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் மன்னார் அமர்வொன்றில் தாய் ஒருவர், “எனக்கு மிகவும் பயமாக இருக்கின்றது. மீண்டும் என்னுடைய மகனை ஆயுதம் தூக்க வைத்து விடுவார்களோ என்று பயமாக இருக்கின்றது. ஏனெனில், அவனை இயல்பான வாழ்க்கைக்கு யாருமே அனுமதிக்கிறார்கள் இல்லை. என்னுடைய மகனை நான் காப்பாற்ற வேண்டும்; அவன் எனக்கு வேண்டும்; அவனைக் காப்பாற்றித் தாருங்கள்”. என்று அழுதார். இவ்வாறான கருத்துகளையும் ஏக்கங்களையும் நாடு பூராவும் தமிழ் – சிங்கள வேறுபாடின்றித் தாய்மார்கள் பலர் வெளியிட்டிருந்தனர். ஆனால், அந்தக் குரல்களை யாராவது கவனிப்பார்களா என்பது கேள்விக்குறி.

ஆனால், வெற்றியாளர்களின் நீதியையும் தனிநபர்களை நாயகர்களாக்கும் வரலாறுகளையும் அதிகாரத்தளமும் அதுசார் நிகழ்ச்சி நிரலும் முன்னெடுப்பதில் ஆர்வத்தோடு இருக்கலாம். அதன்போக்கில் எப்போதாவது மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படலாம். அது, என்றைக்கும் தீராத வன்மங்களைக் கொழுந்துவிட்டு எரியச் செய்து, அதற்குள் மாட்டிக் கொள்ளும் சாமானிய மக்களைக் கருகிச் சாகடிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்யும்!

புருஜோத்தமன் தங்கமயில்