லொறி விபத்தில் 19 வயது இளைஞன் பலி

291 0

தம்புள்ளை – அனுராதபுரம் பிரதான வீதியின் மிரிஸ்கொனியா ஓய சந்தி பிரதேசத்தில் இன்று (20) அதிகாலை இரண்டு லொறிகள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வட்டக்காய் ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்று மரக்குற்றிகளுடன் வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டக்காய் ஏற்றிச் சென்ற லொறியின் முன்னாள் அமர்ந்து சென்ற நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்தவர் குறித்த லொறியின் சாரதி என தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரதான வீதியின் பாதுகாப்பற்ற வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் அதன் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.