சம்பிக்கவின் கைதானது நாடாளுமன்ற பாரம்பரியங்களை மீறும் செயல் – கரு

294 0

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கைதானது நாடாளுமன்ற பாரம்பரியங்களை மீறும் செயல் என்றும் இந்த நடவடிக்கைகள் கவலையளிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

குறித்த கைதானது நாடாளுமன்ற உறுப்பினர்களை கைதுசெய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய பராம்பரியங்களையும், சிறப்புரிமைகளையும் மீறியுள்ளதாகவும் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளளார்.

சம்பிக்க ரணவக்கவை கைது செய்வதற்கு முன்பதாக அதுகுறித்து சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் சம்பிக்க ரணவக்கவின் இல்லத்திற்குள் நுழைந்த பின்னரே இவ்விடயம் தொலைபேசியின் ஊடாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் முதன்மையானவர் என்ற ரீதியில் சபாநாயகர் நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்களை பாதுகாப்பவராவார் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட யோசனையை கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தன்னால் இந்த சம்பிரதாயம் இன்றும் பலப்படுத்தப்பட்டு முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி இரவு இராஜகிரிய பகுதியில் இளைஞர் ஒருவரை விபத்திற்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.