சம்பிக்க ரணவக்கவை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல் – ஐ.தே.க

302 0

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை கைதுசெய்தமையானது அரசியல் பழிவாங்கல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது தெளிவாகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் பின்பற்றப்படாமல் இரவு நேரத்தில் அவருடைய வீட்டை பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டமையானது பழிவாங்கல் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இவ்வாறான செயற்பாடுகளால் தம்மை ஒருபோதும் முடக்கிவிட முடியாது எனவும் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமையை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை, இதற்கு எதிராக தாம் ஒருமித்து வலுவாகப் போராடுவதற்கும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்வதற்கு முன்பதாக அதுகுறித்து சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் சம்பிக்க ரணவக்கவின் இல்லத்திற்குள் நுழைந்த பின்னரே பிரதி சபாநாயகருக்கு இவ்விடயம் தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் அத்தகைய உரிய நடைமுறைகள் எவையும் இவ்விடயத்தில் பின்பற்றப்படாத நிலையில் இது சட்டத்திற்கு முரணான கைது என்றே கூறவேண்டியிருக்கிறது” என அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.