‘737 மேக்ஸ்’ ரக விமான தயாரிப்பு நிறுத்தம் – போயிங் நிறுவனம் அறிவிப்பு

301 0

ஜனவரி மாதம் முதல் சர்ச்சைக்குரிய ‘737 மேக்ஸ்’ விமானங்களின் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும் என ‘போயிங்’ நிறுவனம் அறிவித்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ தயாரித்த ‘737 மேக்ஸ்’ ரக விமானங்கள் 5 மாத இடைவெளியில் இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின. இந்த இரு விபத்துகளிலும் 346 பேர் பலியாகினர். அந்த விமானங்களில் பயணம் செய்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை.

அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகளால் விமானத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் விமானத்தின் புதிய தொழில்நுட்ப அம்சத்தில் பழுது இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து, உலக நாடுகள் அனைத்தும் ‘737 மேக்ஸ்’ விமானங்களை இயக்க தற்காலிக தடைவிதித்தன.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த தடையை நீக்கி, ‘737 மேக்ஸ்’ விமானங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிடலாம் என ‘போயிங்’ நிறுவனம் நம்பியது. ஆனால் 2020-க்கு முன்னர் ‘737 மேக்ஸ்’ விமானங்கள் சேவைக்கு திரும்புவதை அங்கீகரிக்க முடியாது என்று அமெரிக்க போக்குவரத்து கழகம் கூறிவிட்டது.

இந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் முதல் சர்ச்சைக்குரிய ‘737 மேக்ஸ்’ விமானங்களின் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படும் என ‘போயிங்’ நிறுவனம் அறிவித்துள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட நெருக்கடியில் இருந்து நிறுவனத்தை மீட்க நீண்ட காலம் ஆகும் என்பதாலும், போயிங்கின் நிலைத்தன்மை மீது சந்தேகம் உருவாவதால், முதலீட்டாளர்கள் இடையே இது கடும் அச்சத்தை ஏற்படுத்தும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.