விக்கினேஸ்வரனை உடனடியாக அரசாங்கம் கைதுசெய்ய வேண்டும் : அஸ்கிரிய பீடம் கடும் கண்டனம்

232 0

சிங்கள பெளத்த மக்களுக்கு எதிராக சிறுபான்மை மக்களை தூண்டிவிடும் வகையில் விக்கினேஸ்வரன் செயற்பட்டு வருகின்றார். அத்துடன்  மஹாவம்ச வரலாறுகளை இழிவுபடுத்தும் விக்னேஸ்வரனுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  அஸ்கிரிய பீடம் வலியுறுத்தியுள்ளது.

 

விக்கினேஸ்வரனின் கருத்துக்கள் தேசத்துரோக கருத்துக்கள் எனவும் அஸ்கிரிய பீடம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் அண்மையில் முன்வைத்து வருகின்ற கருத்துக்கள் குறித்து தெற்கின் அரசியல்வாதிகள் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்ற நிலையில் சிங்கள பெளத்த விடயங்கள் குறித்து அவர் கூறியுள்ள காரணங்களை அடுத்து இலங்கையின் பிரதான பெளத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடம் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அஸ்கிரிய பீடத்தின் தேரரான நாரங்கனாவே ஆனந்த தேரர் இது குறித்த கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் ஆரம்பத்தில் இருந்தே சிங்கள பெளத்த எதிர்ப்பு கருத்துக்களை கூறிவரும் நபராவார்.

ஏனைய தமிழ் அரசியல் வாதிகளை விடவும் விக்கினேஸ்வரன் கூறும் கருத்துக்கள் வெறுக்கத்தக்க கருத்துக்களாகவே அமைந்து வருகின்றது. இந்நிலையில்  அண்மையில்  மஹாவம்ச  வரலாற்றை இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை அவர் முன்வைத்திருந்தார். இது தேசத்துரோக கருத்தாக நாம் கருதுகின்றோம்.

அத்துடன் சிங்கள பெளத்த மக்களை கோபப்படுத்தும் வகையில் அவரது அரசியல் நோக்கத்துக்காக செய்துகொண்ட கருத்தாக நாம் நினைக்கின்றோம்.

ஒரு நாட்டின் வரலாற்றை அடையாளப்படுத்துவது அந்நாட்டின் தொல்பொருள் வரலாறுகளை கொண்டேயாகும். இலங்கையின் வரலாறுகளும் பெளத்த சிங்கள தொன்மையும் எமது தொல்பொருளியல் சான்றுகள் மூலமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் அவற்றை விமர்சித்து அரசியல் செய்வது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

ஆகவே சிறுபான்மை மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை திருப்பும் விதத்திலும் சிறுபான்மை மக்கள் சிங்கள மக்களை எதிர்த்து செயற்படும் நோக்கத்திலும் எடுக்கும் முயற்சி சர்வதேச சதியா என்ற சந்தேகம் உள்ளது.

எனவே அரசாங்கம் விக்கினேஸ்வரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.