நாட்டின் பொருளாதார சிக்கலை தீர்க்காவிட்டால் வீதியில் இறங்கி மக்கள் போராடும் நிலை ஏற்படும்: சென்னையில் நடந்த கலந்துரையாடலில் ப.சிதம்பரம் கருத்து

324 0

நாட்டின் பொருளாதார சிக்கலை தீர்க்காவிட்டால் வீதிகளில் இறங்கி மக்கள் போராடும் நிலை ஏற்படும் என்று சென்னையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இந்தியா இன்டர்நேஷனல் சென்டர் அமைப்பின் சார்பில் ‘நாட்டின் இன்றைய நிலை – நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார்.

‘இந்து’ என்.ராம் நெறியாளராக இருந்து கலந்துரையாடலை நடத்தினார். அவர் கேட்ட கேள்விகள் மற்றும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ப.சிதம்பரம் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஐந்தரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாட்டின் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது.

2001-02, 2008-09, 2012-13 ஆகிய காலகட்டங்களிலும் நம் நாட்டில் பொருளாதார தேக்கநிலை இருந்து, அதில் இருந்து நாடு எளிதில் மீண்டுவிட்டது. ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு என்பது சாதாரணமானது அல்ல. ‘இந்தியாவின் பொருளாதாரம் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறது’ என்று மோடி அரசில் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியம் ஆய்வுக் கட்டுரையே எழுதியுள்ளார். நிலைமை எவ்வளவு மோசம் என்பதை இதில் இருந்தே நாம் உணரலாம்.

வளர்ச்சியில் கவனம், முதலீடுகளை ஈர்த்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஓர் அரசு கவனம் செலுத்தி வெற்றி கண்டால்தான் பொருளாதாரம் வளரும். ஆனால், பாஜக அரசு 2-வது முறையாக பொறுப்பேற்ற கடந்த 7 மாதங்களில் முத்தலாக் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை திருத்த சட்டம் என்று மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் அரசியலிலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்து ராஷ்டிரம் கொள்கையை நிலைநிறுத்துவதிலும்தான் கவனம் செலுத்தியது.

மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவை முக்கிய காரணம்.

மத்திய அரசின் அனைத்து அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் என்ன சொல்கிறாரோ, பிரதமர் அலுவலகத்தில் இருந்து என்ன குறிப்பு வருகிறதோ, அதன்படிதான் மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் செயல்பட வேண்டி உள்ளது. அமைச்சரவை தீர்மானங்கள்கூட அமைச்சர்களுக்கு முன்கூட்டியே தெரிவது இல்லை.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மத்திய அரசில் பல்வேறு பொறுப்புகளில் பொருளாதார நிபுணர்கள் நியமிக்கப்பட்டு அவர்களது ஆலோசனைகளைப் பெற்றே செயல்பட்டு வந்தார். ஆனால், மோடி அரசு எந்த பொருளாதார நிபுணர்களிடமும் ஆலோசிப்பது இல்லை. ஆலோசனை கேட்டால் சொல்வதற்கு பல நிபுணர்கள் இருக்கிறார்கள். முன்னாள் பிரதமரும், பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங்கிடம் தனிப்பட்ட முறையில் மோடி ஆலோசித்திருக்கலாம். ஆனால், கடந்த ஐந்தரை ஆண்டுகளில் ஒருமுறைகூட அவரிடம் மோடி பேசவில்லை.

பிரச்சினைகள் இருப்பதை பாஜக அரசு முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். பிறகு அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். தொடர்ந்து உரையாடல்கள், ஆலோசனைகள், விவாதங்கள் நடத்தி பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். அப்படி செய்யாவிட்டால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஹாங்காங் போல வீதிகளில் இறங்கி மக்கள் போராடும் நிலைகூட ஏற்படும்.

குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. மக்களை மதரீதியாக பிளவுபடுத்தவும், முஸ்லிம்களை தனிமைப்படுத்தவும் இந்த சட்டத்தை அவசர அவசரமாக மோடி அரசு கொண்டு வந்துள்ளது. கடவுள் அருளால், பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை இல்லை. இருந்தால் அரசியல் சாசனத்தையே மாற்றிவிடுவார்கள்.

கடந்த ஆகஸ்ட் தொடங்கி நான்கரை மாதங்களாக காஷ்மீரில் உள்ள 75 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு அப்பகுதியே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஜனநாயக நாட்டின் ஒரு பகுதி இப்படி இருப்பது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.