பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் பின்பற்றவேண்டிய 12 விதிமுறைகள்!

377 0

வடக்கு மாகாணத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்கள் அனைத்தும் பின்பற்றவேண்டிய 12 விதிமுறைகள் தொடர்பில் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பணித்துள்ளது.

 

சாரதி, நடத்துனர் சீருடை அணிதல் மற்றும் பற்றுச்சீட்டு கட்டாயம் வழங்கல், பயணிகளுக்கு மீதிப் பணம் வழங்கல் உள்ளிட்டவை அவற்றில் அடங்குகின்றன.

2020 ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வட மாகாணத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற பஸ்கள் அனைத்தும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பின்பற்றவேண்டும் என்பதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் (01.01.2020) குறித்த விதிகளை கடைப்பிடிக்கத்தவறின் உரிய தண்டனைகள் வழங்கப்படும் என்றும் வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் கதிர்வேல் செவ்வேள் தெரிவித்தார்.

பயணிகள் சேவையில் ஈடுபடும் பேரூந்துகளின் உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துநர்களால் பின்பற்றப்பட வேண்டிய விடயங்களாவன ,

1. காற்றுத்தடை கண்ணாடிச்சிட்டை பிரதியொன்று முற்புறக் கண்ணாடித்திரையின் இடது பக்கத்தில் ஒட்டப்படல் வேண்டும்.

2. சாரதியும், நடத்துநரும் கடமையின் போது கௌரவமான ஆடையை அணிதல் வேண்டும்.

3. நடத்துநர் பயணிகளிடம் இயைபான கட்டணத்தினை அறவிட்டு பயணச்சீட்டொன்றை வழங்குவதுடன் கட்டாயமாக மீதிப்பணம் வழங்கப்படல் வேண்டும்.

4. பேரூந்தில் கடமையாற்றுகின்ற சாரதி, நடத்துநர் அதிகாரசபையினால் வழங்கப்பட்ட தொழில் அடையாள அட்டையை வைத்திருத்தல் வேண்டும்.

5. சாரதியொருவர் தொலைபேசியை பயன்படுத்துதலோ அல்லது பேரூந்தை செலுத்துகையில் சாரதியின் கவனத்தை ஈர்க்கின்ற வேறேதும் கருமத்தை செய்ய முடியாது.

6. சாரதி, நடத்துநர் பேரூந்தில் உள்ள உரத்தொலிப்பானை பெரிய சத்தமாக போடுதலாகாதென்பதுடன் பால்ரீதியில் திசைப்படுத்தப்பட்ட ஏதேனும் பாட்டை அல்லது திரைப்படத்தை ஒலிபரப்ப முடியாது.

7. பயணிகளுக்கான கட்டண விபரம் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

8. அதிகாரசபையினால் வழங்கப்படும் பொதுமக்கள் முறைப்பாட்டு தொலைபேசி இலக்கம் பேரூந்தின் முன், பின் பக்கங்களில் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

9. மிதிபலகையில் பயணிகள் பயணிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

10. பேரூந்துகளில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசனம் குறித்தொதுக்கப்பட்டு காட்சிப்படுத்தல் வேண்டும்.

11. பயணிகள் போக்குவரத்திற்கு உகந்த தகுதியான பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்துதல் வேண்டும்.

மேலும், பின்வரும் ஆவணங்கள் எல்லா நேரங்களிலும் கட்டாயம் பேரூந்தில் இருத்தல் வேண்டும்.

I. வழியனுமதிப்பத்திரம்

II. காற்றுத்தடை கண்ணாடிச்சிட்டை

III. பேரூந்தின் தகுதிச்சான்றிதழ்

IV. சாரதியின் மருத்துவசான்றிதழ்

V. மாதாந்த ஓட்டுதல் குறிப்புத்தாள்

VI. அரசிறை உரிமம்

VII. காப்புறுதிச்சான்றிதழ்

VIII. சாரதி அனுமதிப்பத்திரம்

IX. அதிகாரசபையினால் வழங்கப்பட்ட சாரதி தொழில் அடையாள அட்டை

X. அதிகாரசபையினால் வழங்கப்பட்ட நடத்துநர் தொழில் அடையாள அட்டை

எனவே பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற பேரூந்துகள் அனைத்தும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கட்டாயமாக பின்பற்றுதல் வேண்டும். குறித்த விடயங்களை 01.01.2020 ஆம் திகதி முதல் கடைப்பிடிக்கத்தவறும் பட்சத்தில் 2017 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஒழுங்குவிதியில் குறித்துரைக்கப்பட்டுள்ளதற்கமைய உரிய தண்டனைகள் வழங்கப்படும் என்பதுடன் எதிர்காலத்தில் தங்கள் வழியனுமதிப்பத்திரம் வருடாந்தம் புதுப்பிக்கப்படும் போது தங்கள் குற்றச்செயல்கள் கவனத்தில் கொள்ளப்படும் – என்றுள்ளது.