வீழ்ந்து காணப்படுகின்ற பொருளாதாரம் கோட்டாவினால் புத்துயிர் பெறும் – பந்துல

354 0

நாட்டில் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்ற பொருளாதாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புத்துயிர் பெறுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்

இலங்கை தபால் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த ‘தபால் பிரமான ஹரசரணி 2019விருது’  வழங்கும் விழா மாத்தறை ருஹுணு பல்கலைக்கழக ரவீந்திரநாத் தாகூர் கேட்போர் கூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது அந்நிகழ்வில்  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினது தலைமையில் இந்த அரசாங்கம் புதிய பயணமொன்றை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

மேலும் இந்நாட்டு சரித்திரத்தை எடுத்துக்கொண்டால் சுதந்திரத்தின் பின் உருவான எந்தவொரு அரசாங்கமும் திறந்த பொருளாதார கொள்கையை கொண்டிருந்தாலும் மூடிய பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருந்தாலும் எமது நாட்டில் மஹிநத ராஜபக்ஷ காலம் வரும் வரை மொத்த தேசிய உற்பத்தி வருடத்துக்கு 20மில்லியன் டொலராகவே இருந்தது.

அதாவது டீ.எஸ், டட்லி, பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச ஆகியோரின் காலங்களில் மொத்த தேசிய உற்பத்தி 20பில்லியன் டொலருக்கும் குறைவாகக் காணப்பட்டது.

கடந்த 2010ன் பின்னர் எமது நாடு நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாறியது. ஆனால் 2014ஆம் ஆண்டில் எமது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 80பில்லியன் டொலர் வரை அதிகரித்தது.

அதாவது சர்வதேசம் கூட ஏற்றுக்கொள்ளும் நாடாக மாறியது. ஆனால் துரதிஷ்டவசமாக 2015ம் ஆண்டு அரசு வீழ்ந்தவுடன் வந்த அரசாங்கத்தின் காலத்தில் அனைத்துமே வீழ்ச்சி அடைந்தன.

அதன் பயனாக எமது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 89பில்லியன் அமெரிக்க டொலராகும். அதனால் நாட்டில் அனைவரும் சிரமத்துக்குள்ளானார்கள்.

பொருளாதார வீழ்ச்சி வேகம் 7வீதமாக இருந்தது பின்னர் 2வீதமாக குறைந்தது. வேலைவாய்ப்புகள் இல்லாமற் போனது. வட்டிவீதம் அதிகரித்தது. பணத்தின் பெறுமதி சரிவடைந்தது.கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள்.

எனவேதான் இந்நிலைமையை மாற்றுவதற்குரிய  வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காகவே  கோட்டாபய ராஜபக்ஷவிடம் நாட்டை மக்கள் ஒப்படைத்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.