தமிழர் தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகப்பட வேண்டாம்- சம்பந்தன்

217 0

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “வாய்ப்புகளைப் பார்த்து  அதனடிப்படையில் நாம் அரசியல் தீர்வைத் தேடிப்போவதில்லை.

தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அதனைப் பெறுவதற்கு நாம் தொடர்ந்து முயல்லோம் அதனை எவராலும் தடுக்க முடியாது.

சிங்கள மக்கள், தமிழ் மக்களின் தீர்வுக்கு எதிரானவர்கள் இல்லை. மேலும் அவர்களின் விரும்பமின்றி தமிழ் மக்களின் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக முதலில் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

சிங்கள மக்களைப்போல தமிழ் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் இருக்கின்றன. அந்த உரிமைகளை வழங்கினால்தான், நாடு பொருளாதார ரீதியாக முன்னேற முடியும்.

அரசியல் அதிகாரப் பகிர்வினூடாகவே உலகிலுள்ள அனைத்து மக்களும், சமமாகவும், சமாதானமாகவும் வாழ்கிறார்கள். இது இலங்கைக்கு புதுமையான விடயமல்ல.

சிங்கள மக்களுக்குப் பெரும்பான்மைத் தலைவர்கள் உண்மையைக் கூற வேண்டிய காலம் விரைவில் வரும்.

இந்த அரசாங்கத்தை பகைக்க நாம் விரும்பவில்லை. அரசியல் தீர்வைக் காண்பதற்காகவும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் நாம் எப்போதும் உதவுவதற்கு தயாராகவே இருக்கிறோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் காலதாமதமின்றி தீர்க்கப்பட வேண்டும். இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பல தடவைகள் அவருடன் கலந்துரையாடி உள்ளோம்.

இந்தியாவுக்குச் சென்று நாம் பிரதமருடன் கலந்துரையாட உள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற சில தினங்களுக்குள்ளாகவே இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர், இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டுமெனவும் அதற்கான அரசியல் அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதியிடம் கூறியிருந்தார்.

எனவே தீர்வு விடயத்தில் இந்தியாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.