ஐ.தே.க.வுக்குள் முரண்பாடுகள் தோன்றியிருப்பதை மூடி மறைக்க வேண்டிய விடயமல்ல – திஸ்ஸ

266 0

ஐக்கிய தேசிய கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியிருப்பது மூடி மறைக்க வேண்டிய விடயமல்ல எனத் தெரிவித்த அக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க, சஜித்தை ஆதரித்த மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஆரம்பத்தைப் போன்றே ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பிளவுக்கு தீர்வு காணப்படவில்லை. அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நாட்டு மக்கள் அனைவரும் இதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர்.

சுமார் 55 இலட்சம் மக்கள் சஜித் பிரேமதாச மீது நம்பிக்கை வைத்து அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளனர்.

சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த அனைவரும் ராஜபக்ஷக்களுக்கு எதிரான தீர்மானத்தையே எடுத்திருக்கிறார்கள். இவ்வாறு வாக்களித்த மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது எதிர்பார்ப்பை எவ்வித பேதமும் இன்றி ஐக்கிய தேசிய கட்சி நிறைவேற்ற வேண்டும். இது தலைவர்களின் பொறுப்பும் கடமையுமாகும்.

எனவே கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறினார்.