ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்தே எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும். எனவே மீண்டும் சின்னம் தொடர்பில் பிரச்சினைகளை ஏற்படுத்தத் தேவையில்லை. அது குறித்து உயர்மட்டத்தில் பேசி உரிய காலத்தில் தீர்க்கமானதொரு முடிவு எடுக்கப்படும் என்று சுதந்திர கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கிடையில் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்ட போது ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு சின்னத்திலும், பொதுத் தேர்தலில் கதிரை சின்னத்திலும் போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டது.
எனினும் தற்போது பொதுஜன பெரமுனவினர் பொதுத் தேர்தலிலும் மொட்டு சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில் இவ்விடயம் குறித்து சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

