ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருக்கிறார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்ற தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம், அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களைப் பட்டியலிட்டு அறிக்கையொன்றையும் வெளியிட்டிருக்கின்றது.
இறுதிக் கட்டப்போரின் போது இடம்பெயர்ந்தவர்கள் மீதான தகுதிவாய்ந்த அதிகாரமுடைய 53 ஆவது படைப்பிரிவின் கட்ட ளைத்தளபதியாகவும், சித்திரவதைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஜோசப் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாகவும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரின் பங்களிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி அவர் பற்றிய 100 பக்க அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக சர்வதேச உண்மைக்கும், நீதித்துக்குமான செயற்றிட்டம் கூறியிருக்கிறது.
தமது அறிக்கை தொடர்பில் கருத்து வெளி யிட்டுள்ள அச்செயற்றிட்டத்தின் நிறைவே ற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ‘தற்போதைய இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக இருப்பதைப் போன்று, கமால் குணரத்னவிற்கு எதிராகவும் ஆரம்பத்திலிருந்தே வலுவான வழக்குகள் இருந்துவருகின்றன.
முக்கிய பதவிகளுக்கு குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் போர்க்குற்றவாளிகளை நியமிப்பதன் ஊடாக இலங்கை அரசாங்கம் உள்நோக்கத்துடன் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படுவதை ஊக்குவித்து வருகின்றது’ என்று சுட்டிக்காட்டியிருக்கின் றார்.
மேலும் போரின் போது கமால் குணரத்னவினால் தலைமை தாங்கப்பட்ட படைப்பிரிவு புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மற் றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீதான தாக்குதலுடன் தொடர்புபட்டிருந்ததாகவும், அப்படைகள் பொதுமக்கள் வைத்தியசாலைகள், தற்காலிக வைத்தியசாலைகள் மற்றும் உணவு விநியோகிக்கும் இடங்கள் போன்றவற்றின் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டிருந்ததாகவும், அதன் விளைவாக ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களும், சொத்தழிவுகளும் ஏற்பட்டதாகவும் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்றிட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டமை யானது சர்வதேச சட்ட மற்றும் மனித உரிமை நியமங்களைப் பின்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள நாடுகளுக்கு ஒரு பாரிய நெறிமுறையிலான சங்கடத்தை ஏற்படுத்துகின்றது. புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக் ஷவினால் மேற்கொள்ளப்பட்ட நியமனங் களைப் பார்க்கும் போது ஜனாதிபதியும், அவருடைய புதிய ஆட்சியின் சில உறுப் பினர்களையும் ஒன்றுசேர்ந்த குற்றவியல் அமைப்பு என்று நினைக்காமல் இருக்க முடியாது.
என்றேனுமொரு நாள் அவர்களது தண்ட னையிலிருந்து பாதுகாப்பு முடிவடையும் போது அவர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்’ என்றும் யஸ்மின் சூக்கா தெரிவித்திருக்கிறார்.

