அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு இணையாக இலங்கையின் மனித மேம்பாட்டு குறிகாட்டி அமைய வேண்டும் என்பதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் குறிக்கோளாக அமைவதால் அதனை மையமாக கொண்டு செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த பொருளாதார , கொள்கை அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர் ஜோன் செனவிரத்ன 189 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்தி குறிகாட்டியில் இலங்கை 71 ஆவது இடத்தில் இருப்பதாவும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் உள்ள ஐ.நாவின் காரியாலயத்தில் கடந்த நேற்று மாலை ஐக்கிய நாடுகள் மனித அபிவிருத்தி திட்டத்தின் இவ்வாண்டுக்கான அறிக்கை வெளியிடும் நிகழ்வு இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது ,
அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு இணையாக இலங்கையின் மனித மேம்பாட்டு குறிகாட்டி அமைய வேண்டும் என்பதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் குறிக்கோளாகும். அந்த குறிக்கோளை அடையும் வகையிலேயேநாம் அனைவரும் செயற்படுகின்றோம். அதன் அடிப்படையில் இவ்வறிக்கையின் ஊடாக இலங்கையின் நிலைப்பாட்டினை அறியவும் இவ்வரசாங்கத்தின் குறிக்கோளை அடையவும் மேலும் செய்ய வேண்டியவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளது.
189 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்தி குறிகாட்டியில் இலங்கை 71 இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
அதேவேளை ,உயர் மனித அபிவிருத்தி சுட்டியை கொண்ட நாடுகளின் பட்டியலில் பதிவாகியுள்ளதுடன், அதன் படி 2018 ஆம் ஆண்டிற்கான மனித அபிவிருத்தி குறியீட்டு மதிப்பெண் 0.780 ஆகவும் அமைந்துள்ளது.
அறிக்கையின் பிரகாரம் எந்த நாடுகளும் அடையாதவகையிலான மிக துரிதமான மேம்பாட்டினை இலங்கை அடைந்துள்ளது.
அந்த வகையில் எமது நாட்டை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் இதன் போது தெரிவித்தார்.

