துன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு

201 0

துன்னாலை கிழக்கு குடவத்தை பகுதியில் இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாயை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பொ.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

அத்துடன் கொல்லப்பட்ட குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் குருதி மாதிரிகளை பெற்று பகுப்பாய்வுக்குட்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேகநபரான தாயாரின் உளநலம் தொடர்பில் உளநல மருத்துவ நிபுணரிடம் முற்படுத்தி சான்றிதழைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு மன்று கட்டளையிட்டது.

வடமராட்சி துன்னாலை குடவத்தை பகுதியில் இரண்டரை மாதம் நிரம்பிய அஜந்தராஜ் அஸ்ரின் என்ற பாலகன் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கிணற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

சம்பவத்தையடுத்து சிசுவின் தந்தையும் தாயாரும் கைது செய்யப்பட்டனர். எனினும் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் தந்தை நேற்றுப் பிற்பகல் விடுவிக்கப்பட்டார். தாய் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டார்.

சிசுவின் தந்தைக்கு 22 வயதும் தாய்க்கு 20 வயதுமாகும். அவர்களுக்கு 2 வயதில் மூத்த ஆண் பிள்ளை ஒன்று உள்ளார். அந்தக் குழந்தைக்கு உடல் நலக்குறை உள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனையில் சிசு தண்ணீருக்குள் மூச்சுத் திணறி உயிரிழந்தது என்று கண்டறியப்பட்டது. சிசுவின் உடலில் வெளித்தோற்றமாகவோ, உள்புறமாகவோ காயங்கள் எவையும் இல்லை எனவும் தெரியவந்தது.

இந்த நிலையில் கொல்லப்பட்ட சிசுவின் தாய் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார். அதன்போது மேற்கண்டவாறான கட்டளைகளை மன்று வழங்கியது.