வெங்காயத்தை பதுக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று சிவில் சப்ளை சிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.வெங்காய விலை உயர்வு, தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.இந்த நிலையில், வெங்காயம் பதுக்கி வைப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து பதுக்கலை தடுக்க மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் மூலம் தமிழகம் முழுவதும் 33 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பதுக்கல் வெங்காயங்களை கண்டுபிடிக்க அதிரடி வேதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து சிவில் சப்ளை சி.ஐ.டி., டி.ஜி.பி.பிரதீப் வி.பிலிப் கூறியதாவது:-
பதுக்கல் வெங்காயத்தை கண்டுபிடிக்க 33 தனிப்படையினரும் 2 நாட்களில் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
அங்கு வியாபாரிகளின் வெங்காய குடோன்களில் சோதனை நடந்தது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் சோதனை நடந்து வருகிறது. யாராவது வெங்காயம் பதுக்கியது தெரியவந்தால் பொதுமக்கள் சிவில்சப்ளை சி.ஐ.டி. போலீசுக்கு தகவல் கொடுக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்படும் தண்டனை பெற்று வியாபாரிகள் கடைசி உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

