இலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் – திருமதி உலக அழகி கரோலின் ஜூரி

250 0

சர்வதேச ரீதியில் நடைபெறும் ஏதேனுமொரு நிகழ்வில் அல்லது போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கையர்களுக்கு நாட்டு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்குமாறு திருமதி உலக அழகி  (Mrs World ) பட்டத்தை வென்ற கரோலின் ஜூரி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்தார். 

 

அழகியல் துறையில் புதிதாக இணைந்து கொண்ட அவருக்கு போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பு எவ்வித ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் கிடைக்கவில்லை என்பதாலேயே இந்த கோரிக்கையை விடுப்பதாகவும், சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்கள் அந்த வெற்றியின் மூலம் எமது நாட்டுக்கே பெருமை சேர்க்கின்றனர் என்பதாலேயே இந்த கோரிக்கையை விடுப்பதாகவும் கூறினார்.

 

அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற கரோலினா இன்று செவ்வாய்கிழமை காலை நாடு திரும்பியவுடன் கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இன்று இந்த இடத்தில் இருக்கின்றமைக்கு கடவுளுக்கு முதலில் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். என்மீது நம்பிக்கை வைத்து என்னை ஊக்கப்படுத்திய என்னுடைய கணவர் மற்றும் இயக்குனர், பெற்றோர் உள்ளிட்ட ஏனைய உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்.

 

 

இலங்கை பிரஜையொருவர் இவ்வாறான போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்றால் அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். காரணம் சர்வதேச ரீதியிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெருபவர்கள் எமது நாட்டுக்கே பெருமை சேர்க்கின்றனர். எனவே இந்த கோரிக்கையை நாட்டு மக்களுக்கு முன்வைக்கின்றேன் என்றார்.