மதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி இன்று ஜாமீனில் விடுதலை

227 0

நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து இன்று காலை மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆனார்.அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியையாகக இருந்த நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கைதான நிர்மலாதேவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுதலை ஆனார்.

அதன்பிறகு வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான நிர்மலாதேவி மனநலம் பாதித்தவர் போல காணப்பட்டார்.

இந்த வழக்கு கடந்த 18-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவி ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தலைமறைவாக இருந்த நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி போலீசார் மீண்டும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது இவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி பரிமளாதேவி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் நிர்மலா தேவி ஜாமீன் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, ‘வழக்கு விசாரணைக்கு வரும்போது முறையாக ஆஜராக வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து நிர்மலா தேவி இன்று காலை மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆனார். அதன்பிறகு இவர் சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.