தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-வது நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் வீதியுலா

349 0

திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-ம் நாள் உற்சவத் தில் 63 நாயன்மார்கள் மாட வீதியில் வலம் வந்தனர்.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-ம் நாள் உற்சவம் நேற்று நடைபெற்றது.

யானை வாகனத்தில் விநாயகர் மற்றும் வெள்ளி யானை வாகனத் தில் சந்திரசேகரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் நேற்று காலை எழுந்தருளி மாட வீதியில் உலா வந்தனர். விநாயகர் மற்றும் சந்திரசேகரர் ஆகியோருக்கு முன்பாக 63 நாயன்மார்கள் மாட வீதியுலா வந்தனர். நாயன்மார்களை பள்ளி மாணவர்கள் சுமந்து சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இதையடுத்து வெள்ளி தேரோட் டம் நேற்று இரவு நடைபெற்றது. வெள்ளி ரதம், வெள்ளி இந்திர விமானம் உள்ளிட்ட வெள்ளி வாக னங்களில் விநாயகர், வள்ளி தெய் வானை சமேத முருகர், உண்ணா முலை அம்மன் சமேத அண்ணா மலையார், பராசக்தி அம்மன், சண்டி கேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

கார்த்திகை தீபத் திருவிழாவில், பக்தர்கள் விரதம் இருந்து வேண்டு தலை நிறைவு செய்வர். அதில், மிக முக்கியமானது குழந்தை வரம் மற்றும் குழந்தைகளின் உடல் நலன் குறித்து வேண்டிக் கொள்வதாகும். அவ்வாறு வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், கரும்புத் தொட்டில் அமைத்து (கரும்புகளில் சேலையை கட்டி) குழந்தைகளை சுமந்து மாட வீதியில் வலம் வந்து வேண்டுதலை நிறைவு செய்வர்.

இன்று மகா தேரோட்டம்

கார்த்திகை தீபத் திருவிழா உற்சவத்தின் மிக முக்கியமானது 7-ம் நாள் நடைபெறும் மகா தேரோட்டம். ஒரே நாளில் பஞ்ச ரதங்கள் வலம் வருவது கூடுதல் சிறப்பாகும். இந்த மகா தேரோட்டம் இன்று காலை 7 மணிக்கு மேல் தொடங்குகிறது. விநாயகர் திருத்தேர் புறப்பாடுக்கு பின்னர் முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் அடுத்தடுத்து தனித் தனித் திருத்தேர்களில் வலம் வருவர். இதில், பராசக்தி அம்மன் திருத்தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பர். மகா தேரோட்டம் நள்ளிரவு வரை நடைபெறும்.