சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

262 0

காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர்ஏந்தி செல்லும் பொகவந்தலாவ, தெரேசியா, கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர்.

இந்த கைது நேற்று (05) மாலையில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த 6 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இவ்வாறு கைது செய்யபட்டவர்களில் பலாங்கொடை பகுதியை சேர்ந்த 3 பேரும் பொகவந்தலாவ, தெரேசியா தோட்ட பகுதியை சேர்ந்த 3 பேரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ, கெசல்கமுவ, ஒயாவில் பாரிய மாணிக்கக் கல் சுரங்க குழிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.

எனவே கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களுக்கும் பொகவந்தலாவ பொலிஸாரினால் பிணை வழங்கபட்டுள்ளதோடு, குறித்த 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸாரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது