ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்து கட்டுநாயக்க பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவுக்கு அண்மையில் தகவல் கிடைத்தது.
அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட கட்டுநாயக்க பொலிஸார் சீதுவை அமன்தொலுவ பிரதேசத்தில் வசித்த ஐவரை அண்மையில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 26 வயதான ஹக்கீம் மொஹமட் ரிப்கான் என்பரே இந்த கொலைக்கு திட்டம் தீட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
சந்தேகநபர் வாழைச்சேனை பகுதியில் வசிப்பவர் எனவும் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இந்த கொலை முயற்சி தொடர்பாக ஏனைய இளைஞர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய கைது செய்யப்பட்ட குறித்த 4 இளைஞர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை 72 மணித்தியாலங்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்ற புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
கட்டுநாயக்க பொலிஸாரால் குறித்த சந்தேகநபர் குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

