நாடு தனிமைப்படும் நிலை – முஜுபூர்

193 0

சர்வதேச நாடுகளுடன் தற்போதைய அரசாங்கத்தின் முரண்பாடுகளினால் மீண்டும் நாடு தனிமைப்படும் சூழ்நிலைகளே காணப்படுகின்றது.

சுவிஸ் தூதரக  பெண் அதிகாரி கடத்தல் விவகாரத்தில் இடைக்கால அரசாங்கம் பொறுப்பற்ற விதமாகவே செயற்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொதாவில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்வதேசத்தின் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை 2015ம் ஆண்டுக்கு பிறகே வளர்ச்சியடைந்த நாடுகளின் நன்மதிப்பினை பெற்று  சர்வதேசத்தின் அங்கிகாரத்தினையும் பெற்றுக் கொண்டது.

முறையாக வெளிவிவகார கொள்கைகள் வகுக்கப்பட்டது. பல உதவிகளும் இதனூடாக கிடைக்கப் பெற்றது.

2015ம் ஆண்டுக்கு முற்பட்ட  அரசாங்கம்  சர்வதேசத்தில் முரண்பட்டுக் கொண்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எந்த வளர்முபக நாடுகளும் இலங்கையுடன் நல்லுறவினை பேணவில்லை.

இந்நிலைமை மீண்டும் சுவிஸ்  தூதரக விவகாரத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தில் விவகாரத்தில் இடைக்கா அரசாங்கம் அக்கறையில்லாமலே செயற்படுகின்றது.   உண்மையினை  பகிரங்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை மாறாக போட்டித்தன்மையுடன் செயற்படுகின்றது.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிட்ட விடயங்கள் இன்று  தலைகீழாக இடம் பெறுகின்றது.

அமைச்சரவையின் எண்ணிக்கையினை குறைத்து இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையினை அதிகரித்து முறையற்ற விதத்தில் செயற்படுகின்றது.

தமிழ்- முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆரம்ப காலத்தில் இருந்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது .

தேசிய பாதுகாப்பை முன்வைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் , ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய பாதுகாப்பு குறித்து புதிதாக எதனையும்  செயற்படுத்தவில்லை.

தேசிய பாதுகாப்பு வெறும் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாத்திரமே பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.