இலங்கையில் இரண்டு அரசாங்கங்களை ஏற்படுத்த திட்டம்!

169 0

இலங்கையில் இரண்டு அரசாங்கங்களை ஏற்படுத்த ஐக்கிய இராஜியத்தின் கொன்சவேட்டிவ் கட்சி தமது கொள்கை பிரகடனத்தில் தெரிவித்துள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

அவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக ஆளும் கன்சவேட்டிவ் கட்சி கடந்த 25 ஆம் திகதி 64 பக்கங்களை கொண்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்தது.

அந்த விஞ்ஞாபனத்தின் 59 ஆவது பக்கத்தில் இலங்கையில் இரண்டு அரசாங்கங்களை உருவாக்க அனுமதி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உலகம் முழுவதும் நல்லிணக்கம், நிலையான தன்மை மற்றும் நியாயத்தை நிலைநாட்ட தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் அதேவேளை சைப்பிரஸ் மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் நிலவிய தற்போதைய அல்லது முன்னர் இருந்த முரண்பாடான நிலைமையை தீர்க்க எமது ஒத்துழைப்பு பெறப்பட்டது.

மேலும் அந்த விஞ்ஞாபனத்தின் 53 ஆம் பக்கத்திலும் இலங்கையில் நிலவும் முரண்பாட்டு நிலைமைக்கு தீர்வு காண இரண்டு அரசாங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

அதற்காகவே அவர்கள் மக்கள் ஆணையை கேட்கின்றனர் இந்த முறை அங்கு நடைபெறும் பொது தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றிப் பெற்றால் அவர்களுக்கு இலங்கையில் தமிழ் ஈழம் ஒன்றை அமைப்பதற்கான சட்டரீதியான ஆணை கிடைக்கும்.

அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அவர்களால் தமிழிழத்திற்கான போராட்டத்தை ஆரம்பிக்க முடியும். அதற்காக ஐ.நாவிலும் வாக்களிக்க சந்தர்ப்பம் உள்ளது.

இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது. அந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டு 8 நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதரகம் இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிடவில்லை.

எமது உயர்ஸ்தானிகர் தூங்குகின்றாரா? அல்லது அவர்கள் பிரிவினைவாதிகளுடன் தொடர்புகளை பேணுகின்றனரா? என கேட்க வேண்டியுள்ளது.

ஆகவே இது தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அவ்வாறு செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்.

இதற்கு வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்கள் விரைவாக பதிலளிக்க வேண்டும். இது குறித்து பதிவு தபாலில் வெளிவிவகார அமைச்சரை தெளிவுப்படுத்தியுள்ளேன்.

இது இலங்கை சந்தித்துள்ள புதிய இராஜதந்திரமிக்க சவாலாகும். இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சரின் கவனம் திரும்பும் என எதிர்ப்பார்க்கின்றேன்´ என்றார்.