கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் உத்தியோகத்தர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நாட்டின் இராஜதந்திர வரலாற்றில் ஓர் கரும்புள்ளியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலையடுத்து முதற்தடவையாக தனது மெளனத்தைக் கலைத்த முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இச் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புதிய அரசாங்கம் ஒன்று பொறுப்பேற்றதும் அவ்வரசாங்கத்தை விமர்சிப்பது நாகரீகமற்றது. மக்கள் ஆணையை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு காலம் வழங்க வேண்டும். இருப்பினும் தற்போது இந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற, இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்களை பார்த்துக்கொண்டு தொடர்ந்தும் மௌனமாக இருக்க முடியாது.
தற்போது இடம்பெறும் சில சம்பவங்கள் அமைதியை சீர் குலைத்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதுகாப்புத் துறையை சார்ந்த பலருக்கும் இந்த அரசாங்கத்தால் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக அண்;மையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு விசாரனைக்கு உட்படுத்தப்பட்டமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கை உலகின் ஏனைய நாடுகளுடன் சிறந்த உறவை பேணிவருகின்றது. சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கை தொடர்பில் நன்மதிப்பு காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் இலங்கையின் வெளியுறவுக்கொள்கையில் கரும்புள்ளியை பதித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சர்வதேச ரீதியில் இலங்கை விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.
ஒழுக்கமான, திறமையான பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு எதிராக பழிவாங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர்கள் சிலருக்கு இப்போதே அழுத்தம் பிரயோகிக்க ஆரம்பித்துவிட்டனர். இது நாம் பெற்றுக்கொடுத்து கருத்து தெரிவிக்கும் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை என்பவற்றுக்கு எதிரான செயற்பாடாகும்.
நாட்டை பாதுகாத்தல்,பழிவாங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மற்றும் இலங்கையை உலகத்தில் உயர் நிலைக்கு உயர்த்தும் உறுதி மொழிக்கு மக்கள் வழங்கிய ஆனைக்கு முரணான வகையில் இந்த அரசாங்கம் செயற்படுவது வருந்தத்தக்கது.
கட்சிசாராத, சட்ட முறைமையை மதிக்கும் அதிகாரிகள் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தல், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு அழுத்தம் கொடுத்தல் என்பன 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தை நினைவுப்படுத்துகின்றது.
இந்நிலை குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். இதை ஜனாதிபதியின் தனிப்பட்ட கவனத்திற்கு எடுத்து செல்கின்றேன். இந்நாட்டில்; அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் இருக்க வேண்டும்.
ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கத்தினால் இலங்கை மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டவாறு சுதந்திரமான சமத்துவமிக்க நாட்டை உருவாக்குவதற்கு தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சம்பவங்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறும் பழிவாங்கும் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

