கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான எமது அரசாங்கத்தில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை ஒருபோதும் மீறமாட்டோம். மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் காப்பாற்றுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டில் பொருளாதார சவால் கள் நிறைந்துள்ள நிலையில் நிதி அமைச்சினை என்னிடம் கொடுத்துள்ளனர். துரிதகதியில் நாட்டினை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு உரையாற்றுகையிலேயே இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டில் நிதி அமைச்சராக நான் பதவியேற்கும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும். நான் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற சகல சந்தர்ப்பங்களிலும் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. ஆனால் எனது கடமையை நான் சரியாக அப்போதெல்லாம் செய்து முடித்தேன். இப்போதும் நாட்டில் பாரிய சவால்கள் நெருக்கடிகள் இருக்கின்ற நிலையிலேயே நிதி அமைச்சு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் கூறும் வகையில் இன்று நாட்டில் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. வீழ்ச்சி கண்டுள்ள எமது நாட்டின் பொருளாதாரத்தை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனவும் மக்கள் எம்மிடம் எதிர்பார்க்கின்றனர். ஆகவே அவ்வாறான விரைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதுடன் மக்கள் உணரக்கூடிய வேலைத்திட்டமும், முதலீட்டாளர்கள் எம்மீது நம்பிக்கை வைக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
அதிகாரிகளை நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவு அழைக்கும் என்ற அச்சமே இன்று மத்திய வங்கி அதிகாரிகளிடம் உள்ளது. ஆனால் இந்த நிலைமைகளை நிறுத்த சட்ட வரைபொன்றை கொண்டுவந்தேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பொருளாதார கொள்கை ஒன்றினை உருவாக்க வேண்டிய காலம் வந்துள்ளது. அவ்வாறு ஒரு உறுதியான கொள்கையை உருவாக்கினால் மட்டுமே பொருளாதாரம் மீதான நம்பிகை எழும், முதலீடுகள் மீண்டும் குவியும்.
இப்போது நிலவும் பலவீனமான பொருளாதார கொள்கைக்கு பதிலாக ஆரோக்கியமான நம்பிக்கையான பொருளாதார கொள்கையொன்று உருவாகும். நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கும். விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், நடுத்தர தொழிலாளர்கள் மற்றும் உயர்மட்ட நிறுவனங்கள் மீண்டும் உயிர்ப்பெறும் நிலை ஏற்படும். வளர்ச்சி உணரப்படும். இந்த நிலைமையை உடனடியாக உருவாக்குவது எம் அனைவரதும் கடமையாகும். இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிற்கு அதிக வாக்குகளை கொடுத்து வெற்றிபெற செய்ததன் பிரதான காரணம் இதுவேயாகும்.
கடந்த 2005- 2014 ஆம் ஆண்டு வரையில் என்னால் முன்னெடுக்கப்பட்ட அரசாங்கத்தில் நான் கொடுத்த வாக்குறுதியை மீறாததை போலவே கோத்தாபய ராஜபக் ஷவின் தலைமையிலான அரசாங்கத்திலும் வாக்குறுதிகள் ஒருபோதும் மீறப்படாது என உறுதியாக என்னால் கூறமுடியும். கொடுத்த வாக்குறுதியை ஒருபோதும் மீறமாட்டோம். நாம் சொல்வதை செய்வோம். புதிய அரசாங்கத்தின் நோக்கம் எப்போதும் மக்களை கேந்திரப்படுத்திய பொருளாதார கொள்கையொன்றை உருவாக்குவது என்பது உறுதி என்றார்.

