தமிழர்களின் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் எதிராக வலுவான இனவாத சக்திகள் உருவெடுப்பதால் தமிழர்களாகிய நாங்கள் எம்மைப் பலப்படுத்துவதற்கு நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழக் கட்சிகள் வேற்றுமையை மறந்து பொது உடன்பாட்டுக்குக் கிழக்கு மாகாணத்திலாவது வரவேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஷ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் சில தமிழ் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே கலந்துரையாடல் திங்கட்கிழமை நேற்று இடம்பெற்றது இதன்போது முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் குறிப்பாக, தமிழர்களைப் பலவீனப்படுத்துவதற்காக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக இருக்கின்ற தமிழர்களை வடக்கு வேறாகக் கிழக்கு வேறாகப் பிரித்து கிழக்கிலும் உள்ள ஒரு சில பலவீனமான பிரதிநிதிகளைத் தனிமைப்படுத்தி அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றி .
இனவாதம் பேசி அதிலும் தமிழர்களைப் பிரித்து ஒரு பலவீனமான களத்தில் கிழக்குத் தமிழர்களைக் கொண்டு நிறுத்துவதற்கு இலங்கையின் இனவாத அரசின் பிரதிநிதிகள் கடந்த தேர்தலிலும், எதிர்வரும் தேர்தல்களிலும் சாதி, மத, இன முரண்பாட்டைத் தோற்று வித்து தமிழ் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாரியதொரு சதி முயற்சியை மேற்கொள்வதாகச் சந்தேகிக்க வேண்டி உள்ளது. இந்தவிடயத்தை முறியடிப்பதற்குத் தமிழர்களாகிய நாங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
இலங்கையின் இனவாதத்தின் உச்சக்கட்டமே நாட்டில் போராட்டம் உருவாகுவதற்குக் காரணமாக அமைந்தது. இதன் பலாபலனை நாடும்,மக்களும் அனுபவித்தது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்னும் முன்னேற்றகரமான செயற்திட்டங்கள் இல்லாத நிலையில் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்ற தேர்தல்கள் ஊடாக இனவாதத்தைப் பேசி சமூகத்தைப் பல கூறுகளாகப் பிரித்து இதனூடாக தமிழர்களைப் பலவீனப்படுத்தலாம் எனத் திட்டமிட்டுச் செயற்படுகின்ற இனவாத அரசின் கைக்கூலிகளுடன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருசிலர் இனவாதிகளோடு சேர்ந்து தமிழர்களைப் பலவீனமாக்கும் பாரிய சதி வலையில் ஈடுபடப்போகின்றனரா?
தமிழ் இனத்தைப் பலவீனப்படுத்துவதற்காகத் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்ற குழுவினரால் முன்வைக்கப்பட்ட பிரித்தாளும் தந்திரமான அபிவிருத்தி என்னும் போர்வையிலும், தமிழர்கள் பலமாக இருக்க வேண்டுமெனக் கூறிக் கொண்டு கிழக்கு என முலாம் பூசி தமிழர்களைப் பலவீனப்படுத்துவதற்காக மாவட்டத்திலுள்ள கையாளாதவர்களை பலிக்கிடாவாக்கி தமிழர்களைத் தெருவில் நிறுத்துவதற்குப் போடுகின்ற வலையில் தமிழர்கள் சிக்கி விடக் கூடாது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் கைக்கூலிகள் தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும். இனச் சுத்திகரிப்புப் போர்வையில் தமிழரின் பலம் வளரவேண்டும் எனக் கூறிக் கொண்டு தமிழர்களைப் பலவீனமாக்குவதற்கு மேற்கொள்ளும் சதி வலையை உடைத்தெறிவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வாக்குப் பலத்தை அதிகரிக்கவைப்பதற்கும், தமிழ்பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்திலும், மாகாணசபையிலும் அதிகரிக்க வைக்க நாங்கள் ஏனைய தமிழர்களின் உரிமையை ஏற்றுக் கொண்ட தமிழ்க் கட்சிகளுடன் பொது உடன்பாட்டிற்கு வந்து பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம்
அதேவேளை எச்சந்தர்ப்பத்திலும் இந்தக் கைக்கூலிகளிடமும், பிரதேசவாதக் கட்சிகளுடனும் நாங்கள் இம்மாவட்டத்தில் சேரமாட்டோம் அதேவேளை பிரதேசவாதம் இல்லாத ஜனநாயக மரபுகளை ஏற்றுக் கொண்ட தமிழக் கட்சிகளுடனே பொது உடன்பாட்டிற்கு வரத் தயாராக இருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

