ஆப்கனில் தலிபான் தளபதி உட்பட 10 பேர் பலி

278 0

ஆப்கனில் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் தலிபான் தளபதி உட்பட 10 தீவிரவாதிகள் பலியாகினர்

இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கனில் குண்டுஸ் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகள் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில் தலிபான் தளபதி உட்பட 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் தீவிரவாதிகளின் ஆயுதங்களும் தாக்கி அழிக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த சில வாரங்களாகவே மூன்று மாகாணங்களில் (நன்கர்ஹர், கந்தஹர், வார்டார்க்) ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்தத் தேடுதல் வேட்டையில் தலிபான்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், தலிபான்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் சமீபத்தில் தலிபன்களுடனான பேச்சுவார்த்தயை முறித்துக் கொண்டது அமெரிக்கா. இதில் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் கைதிகள் இடமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் தலிபான்களால் 2016 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட இரண்டு அமெரிக்கப் பேராசிரியர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், ஆப்கன் ராணுவ வீரர்கள் 10 பேரையும் தலிபான்கள் விடுதலை செய்தனர். இதற்குப் பதிலாக 3 தீவிரவாதிகளை ஆப்கன் அரசு விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலிபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி இருக்கிறார்.