செங்கடலில் கப்பலை கடத்திய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்: சவுதி புகார்

261 0

ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல் ஒன்றை கடத்தியதாக சவுதி கூட்டுப் படைகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து சவுதி அரசின் தேசிய ஊடகம் வெளியிட்ட செய்தியில், “ வளைகுடா நாடுகளிருந்து ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் கப்பல்கள் செல்வதற்கு பயன்படுத்தப்படும் அல்-மண்டேப் நீரிணையில் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இந்த நிலையில் செங்கடலில் மீண்டும் ஒரு கப்பலை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். சிறைப்பிடித்த கப்பலை கிளர்ச்சியாளர்கள் உடனடியாக விடுவிக்க வேண்டும்” கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஏமனில் செங்கடலின் தென் பகுதியில் மூன்று கப்பல்களை ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்தவாரம் கடத்தினர். கடத்தப்பட்ட கப்பல்களில் ஒன்று சவுதியைச் சேர்ந்தது. மற்ற இரண்டு கப்பல்கள் தென்கொரியாவுக்குச் சொந்தமானவை.

மேலும், கப்பலில் இருந்த 16 ஊழியர்களையும் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடத்தினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கப்பல்களையும், ஊழியர்களையும் விடுவித்தனர்.

இந்த நிலையில் மீண்டும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கப்பலை கடத்தியதாக சவுதி தெரிவித்துள்ளது. ஏமனில் நடக்கும் போரில் சவுதி கூட்டுப் படைகள் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.