தென் கொரியாவின் பிரபல பாப் பாடகி மரணம்

250 0

தென் கொரியாவின் பிரபல பாப் பாடகியான கோ ஹரா தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தென் கொரியாவின் பிரபல பாடகி கோ ஹரா (வயது 29). இவர் கடந்த ஆறு மாதத்துக்கு முன்னரே தனது காதலர் தனிப்பட்ட வீடியோக்களை பொது வெளியில் பரப்பியதற்காக மன அழுத்ததில் தற்கொலைக்கு முயன்றார். பின்னர், மயங்கி நிலையில் தனது இல்லத்திலிருந்து மீட்கப்பட்டார்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கோ ஹராவின் முன்னாள் காதலர் ஜாங் பப்புக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கோ ஹரா ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக குட் நைட் என்று பதிவிட்டு இருந்தார்.

 

2008 ஆம் ஆண்டு பெண்கள் பாப் குழுவின் மூலம் பாடகியாக அறிமுகமானார் கோ ஹரா. பின்னர் குழுவிலிருந்து விலகி தனியாக தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார்.

முன்னதாக, பிரபல கொரிய பாப் பாடகி சூலி அக்டோபர் மாதத்தில் தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 25. சமூக வலைதளங்களில் சூலிக்கு எதிரான விமர்சனங்கள்தான் தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

தென்கொரியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் 10 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.