” பெறுபேறு உங்கள் திறனுக்கான மதிப்பீடு அல்ல” : மாணவியின் டுவிட்டர் பதிவுக்கு சுந்தர் பிச்சை பாராட்டு!

367 0

தனக்குப் பிடிக்காத பாடத்தில் பூச்சியம் எடுத்ததும் பின்னர் பாடத்தை மாற்றியதால் சிறந்த பெறுபேறு எடுத்து தேறியதையும் குறிப்பிட்டு ” பெறுபேறு குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல ” என மாணவி குறிப்பிட்டதை அருமையாகச் சொன்னீர்கள் என கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தமிழகத்தில், சென்னை கே.கே.நகரில் ஒரு எளியக்குடும்பத்தில் பிறந்த சாதாரண பாடசாலையில் படித்து பட்டம் வாங்கி பின்னர் சிரமப்பட்டு அமெரிக்காச் சென்று படித்து கூகுள் நிறுவனத்தில் இணைந்து கூகுள் குரோமை அறிமுகப்படுத்தி அதன் தலைமை நிர்வாகியாக பதவி வகிப்பவர் சுந்தர் பிச்சை.

மனிதரை மதிப்பிடுவது தேர்வு, பெறுபேறுகள் அல்ல என்பது குறித்து பலரும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்தாலும் பெற்றோர்களும், சமுதாயமும் தேர்வு பெறுபேறுகளை முன் வைத்தே தகுதியை அளப்பதால் பலர் விரும்பிய பாடம் எடுத்து படிக்க முடியாமலும், மனப்பாட முறைக்கும் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சந்தர்ப்பத்தில் விரும்பாத பாடம் படித்த மாணவி அதில் பூச்சியம் வாங்கியதை குறிப்பிட்டு சமூகவலைதளத்தில் சாதாரணமாக பதிவிட அதற்கு  கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர்  பிச்சையிடம் இருந்து எதிர்பாராத பாராட்டு கிடைத்துள்ளது.

சாராபினா நான்ஸ் என்ற மாணவி முதலில் இயற்பியல் தேர்வில் பூச்சியம் பெறுபேறு பெற்றதாகவும் அதற்குப் பின்னர் தனது ஆசிரியரின் ஆலோசனைப்பெற்று தனது துறையை மாற்றி வானியல் சார்ந்த இயற்பியல் துறையில் சிறந்து விளங்குவதாகவும் முனைவர் பட்டம் பெற்றதாகவும் குறிப்பிட்டு “தேர்வில் பூச்சியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல” என்று அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார்.

மாணவியின் இந்த டுவிட்டர் பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்த  சுந்தர் பிச்சை, “அருமையாகச் சொன்னீர்கள் , எழுச்சியூட்டும் ஒன்று” எனப் பாராட்டியுள்ளார். சுந்தர் பிச்சையின் பாரட்டுக்கு பலரும் மகிழ்ந்து பதிவிட்டுள்ளனர். பெறுபேறுகள் உங்கள் திறனுக்கான மதிப்பீடு அல்ல என்பதை சுந்தர் பிச்சை போன்றோர் தவிர யாரால் உணர்ந்து பாராட்ட முடியும். இது தேர்வு பெறுபேறுகளே தங்களது தகுதி என எண்ணும் மனப்பான்மை உள்ளவர்கள் அதை மாற்றிக்கொள்ள உதவும் பதிவாகும்.