30 ஆண்டுகளாகத் தொடர்ந்து புகைப்பிடித்த நபர் : கரிய நிறமாகிய நுரையீரல்

343 0

சீனாவின் ஜியாங்சுவில் உள்ள வூக்ஸி வைத்தியசாலையில், தொடர்ந்து புகைப்பிடிப்பதனை வழக்கமாக கொண்டிருந்த ஒருவரின் நுரையீரலின் நிறமானது, வைத்தியர்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

30 ஆண்டுகளாகத்  தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கத்தினை கொண்ட 52 வயது நபர் ஒருவரின் உடலிலிருந்து இந் நுரையீரல் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தமது மரணத்திற்குப் பின்பு உடல் உறுப்புக்களைத் தானமாக வழங்குவதற்கு விரும்பியதைத் தொடர்ந்து இவரது நுரையீரல் வைத்தியர்களால் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆரோக்கியமான ஒருவரின் நுரையீரல்  இளஞ்சிவப்பு நிறமாகவே காணப்படும். இவரது நுரையீரலோ கரிய நிறத்தில் காணப்பட்டுள்ளது. இவர் தொடர்ந்து 30வருடங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தமையால் அதன் கழிவுகள் நுரையீரலின் கரிய நிறத்திற்குக் காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி, நுரையீரல் அகற்றப்படும் காணொளி சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ‘புகைபிடிக்க உங்களுக்கு இன்னும் தைரியம் இருக்கிறதா?’ என்ற தலைப்பில் வைத்தியசாலையால் பதிவேற்றப்பட்டுள்ளது.

அண்மையில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் படி, இலங்கையில் 28 வீதமானோர் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளதாகவும்,  இவ்வாறு புகைப்பிடிப்பதால்,  ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 1.2 மில்லியன் மக்கள் இறப்பதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.  அத்துடன் புகைபிடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இரு மடங்காகவும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 30 மடங்காகவும் காணப்படுகின்றதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.