நாட்டின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்தனவிற்கு இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வாழ்த்துத் கூறியிருப்பதுடன், இலங்கையுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவரது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேவேளை தினேஷ் குணவர்தனவிற்கு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக் கூறியிருக்கும் பாக்கிஸ்தானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, இருநாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நீங்கள் வெளிவிவகார அமைச்சராக நியமனம் பெற்றுள்ளமைக்கு எனது வாழ்த்துக்கள். உங்களுடைய பதவிக்காலத்தில் இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான தொடர்புகள் மேலும் விரிவடையும் என்று நம்புகின்றேன் என நேபாள வெளிவிவகார அமைச்சர் பிரதீப் ஜியாவாலி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார்.

