பேராயரை சந்தித்தார் ஜனாதிபதி கோத்தாபய

276 0

ஜனாதிபதிக்கும் பேராயருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கண்டறிவதற்காக சுயாதீனக் குழுவொன்றை நியமித்து விரைவில் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக பாராபட்சம் பார்க்காது நடவடிக்கை எடுக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்தார்.

தான் ஏற்கெனவே இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

சீர்குலைந்துள்ள உளவுப் பிரிவை மேம்படுத்துமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தான் பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது மேற்கொண்ட வேலைத்திட்டங்களை மீண்டும் விரைவில் ஆரம்பிக்குமாறு புதிய பாதுகாப்புச் செயலாளரைப் பணித்திருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.