மாவோயிஸ்ட்களை சந்திப்பதை தடுக்க சிறையில் தீபக்கை கண்காணிக்கும் காவலர்கள்

284 0

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மாவோயிஸ்ட் தீபக்கை கண்காணிக்கும் பணியில் 12 சிறைக் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை அருகே, கடந்த 9-ம் தேதி தேடுதல் வேட்டையில் சிக்கிய, சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக்(30), காலில் ஏற்பட்ட காயத்தால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து தடாகம் காவல்துறையினர், தீபக்கை கைது செய்தனர். தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க தேவையான நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, தீபக், மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

மத்திய சிறையின் உயர் பாதுகாப்புப் பிரிவில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பை தீவிரப்படுத்த, கியூ பிரிவு காவல்துறையினர் சார்பில், சிறைத்துறை நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ஒரு ஷிப்டுக்கு 4 சிறைக் காவலர்கள், மாவோயிஸ்ட் தீபக்கை கண்காணித்து, பாதுகாப்பு அளித்துவருகின்றனர். மூன்று ஷிப்ட் அடிப்படையில் மொத்தம் 12 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்கள் அனூப், வீரமணி, கண்ணன் ஆகியோர் தற்போது மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களும், மத்திய சிறையின் உயர் பாதுகாப்புப் பிரிவில் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எந்த காரணத்தை கொண்டும், மாவோயிஸ்ட் தீபக்கை சந்தித்து விடக் கூடாது என்பதற்காக, சிறைக் காவலர்கள் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கூறும்போது,‘மத்திய சிறையில் மருத்துவமனைக்கு அருகே, உயர் பாதுகாப்புப் பிரிவில் மாவோயிஸ்ட் தீபக் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கான கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.