தமிழர்கள் கோட்டாவுக்கு வாக்களிக்காமை இனரீதியான செயற்பாடு அல்ல – சிறிதரன்

203 0

தமிழ் மக்களின் அபிலாஷைகளை யார் நிறைவேற்றக்கூடியவர் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்கியிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்காமை இனரீதியான செயற்பாடு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்து.

தங்களுக்கான தலைவரை தெரிவு செய்யும் தேர்தலில் சிங்கள மக்கள் மிகத் தெளிவான முடிவை அறிவித்துள்ளனர்.

அதேபோல தமிழ் மக்களும் தங்களது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக அறிவித்துள்ளனர். போரை வழிநடத்திய ஒருவர் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதாலேயே அவரை தமிழ் மக்கள் ஏற்று வாக்களிக்கவில்லை.

இதில் இனரீதியான செயற்பாடு இருக்கவில்லை. நாட்டின் ஜனாதிபதி சிங்களவர் என்பதற்கு அப்பால் எந்த ஜனாதிபதி தமிழர்களுக்கு தேவையானதை செய்வார் என்பதன் அடிப்படையிலேயே அவர்கள் வாக்களித்தனர்” என மேலும் தெரிவித்துள்ளார்.