கோத்தபாய ராஜபக் ஷவை மிகப் பெரிய பூச்சாண்டியாகக் காட்டி அவரது வெற்றியைத் தடுக்க முனைந்தவர் கள் இப்போது தோல்வியடைந்திருக்கின்றார்கள்.
இந்நிலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கோத்தபாயவின் வெற்றிக்கு தோள் கொடுத்து மலையக மக்களை வெற்றியின் பங்காளர்களாக்கி இருக்கின்றது. இதன் மூலம் எமது மக்கள் பல்வேறு சாதக விளைவுகளையும் பெற்றுக் கொள்வது உறுதியாகும் என்று முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.சிவஞானம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்பட்டது. இத்தேர்தலில் 35 வேட்பாளர்கள் களமிறங்கியபோதும் கோத்தாவுக்கும், சஜித்துக்கும் இடையிலேயே போட்டி நிலவியது. எனினும் இத்தேர்தலில் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ அமோக வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாகி இருக்கின்றார்.
இவரது வெற்றி ஒரு மிகப்பெரும் சாதனையாகும். கோத்தாவின் வெற்றிக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் காத்திரமான பங்காற்றி இருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்ட மான் கள நிலவரங்களை ஆராய்ந்து எடுத்த முடிவு மலையக மக்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு உந்துசக்தியாகி இருக்கின்றது.
கோத்தபாய ராஜபக் ஷ யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதிப் பூங்காற்று வீசுவதற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றார். ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின் றார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கும், அபிவிருத்திக்கும் அவர் வித்திட்டிருக்கின்றார். இந்த நாட்டின் ஜனாதிபதியாவதற்குரிய சகல தகுதிகளும் அவருக்கு இருக்கின்றன. அவர் செயல் வீரராக விளங்குகின்றார். அவரது சிந்தனை மற்றும் செயற்பாடு தொடர்பில் ஆறுமுகன் தொண்டமானும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் அதிகளவில் நம்பிக்கை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அல்லது ஐ.தே.க.வை ஆதரிக்கும் மலையக அரசியல்வாதிகள் கோத்தபாய ராஜபக் ஷவை பல்வேறு விதமாக விமர்சித்து வந்தனர். கோத்தபாயவை மிகப்பெரும் பூச்சாண்டியாகக் காண்பித்து அவரது வாக்கை தடுக்க முயன்றனர். எனினும் இது சாத்தியமாகாத நிலையில் இப்போது கோத்தாவை விமர்சித்தவர்கள் தோல்வி கண்டுள்ளனர். நல்ல ஒரு பாடமாக அவர்களுக்கு அமைந்திருக்கின்றது. தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும், சுயநலன் கருதியும் செயற்பட்டவர்கள் இப்போது மண் கவ்வியுள்ளனர். மக்கள் நலன் கருதி செயற்படாதவர்கள் தூக்கி எறியப்பட்டிருக்கின்றனர். ஏனையோருக்கு இது ஒரு பாடமாகும்.
கோத்தபாயவின் தலைமையில் நாடு பல்வேறு நன்மைகளையும் பெற்றுக் கொள்ளும். நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்தி மேலோங்கும். சிறுபான்மை மக்கள் பல்வேறு வழிகளிலும் நன்மையடைவர். மலையக மக்களின் அபிவிருத்தியும் மேம்படும். இ.தொ.கா. 32 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோத்தபாய ராஜபக் ஷ பூரண ஒத்துழைப்பை வழங்குவார். கோத்தவின் வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் இ.தொ.கா. தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றார்.

