புதிய ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை முன்னெடுக்கும்சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்போம் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் நான் கட்சி சார்பற்றவராக போட்டியிட்டபோதும் எதிர்வரும் தேர்தல்களில் தேசிய மக்கள் கட்சியுடன் இணைந்து எமது பயணத்தை தொடரவுள்ளோம். எமது இந்த பயணத்துக்கு அதிகமான இளைஞர்களை இணைத்துக்கொண்டு நாட்டின் எதிர்காலத்தை அவர்களின் கைகளுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும். இன,மத பேதமின்றி நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல இணைந்து செயற்படுவதற்கு அனைவருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.
மேலும் அடுத்துவரும் பொதுத்தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம். எமது அணியில் சிறந்த புத்திஜீவிகள் இருக்கின்றனர். ஜனாதிபதி தேர்தலுடன் பொதுத்தேர்தலை ஒப்பிடமுடியாது. அதனால் முறையான அரசியல் கலாசாரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு மக்கள் எமக்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.
தேசிய மக்கள் கட்சி காரியாளயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

