நிலப்பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக குறிப்பிடும்படியாக மழை பெய்யாத நிலையில், திடீரென தமிழக கடலோரப் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழக கடலோரப்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது நிலப்பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசிலஇடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர் காஞ்சிபுரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தேனி, ராம நாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 13 செ.மீ, மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

