குடியுரிமையற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது தவறான முன்னுதாரணம்!

352 0

கோத்தாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை வெற்றிக்கும், தோல்விக்கும் இடையிலான பிரச்சினையல்ல. ஏனெனில் அவ்வாறு நிச்சயமாகத் தேர்தலில் தோல்வியடைவார்.

 

ஆனால் எமது நாட்டின் குடியுரிமையற்ற ஒருவர் தேர்தலில் போட்டியிடக்கூடிய தவறான முன்னுதாரணத்தை நாம் வழங்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்தோ அல்லது அமெரிக்காவிலிருந்தோ எவரேனும் வந்து தேர்தலில் போட்டியிட்டால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையேற்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு அறிக்கைகளின் பிரகாரம் கோத்தாபாய ராஜபக்ஷ, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை விடவும் 8 சதவீதம் பின்னணியிலேயே இருக்கின்றார் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் எப்படியும் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றியடைய மாட்டார். ஒருவேளை வெற்றி பெற்றால் கூட, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு ஏற்பட்ட நிலையே அவருக்கும் நேரும்.

கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டு இலங்கையின் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டிருப்பதாகக் கூறினாலும் கூட, அதற்காக அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை என்பது இப்போது நிரூபனமாகியிருக்கின்றது.

கோத்தாபயவின் அமெரிக்க கடவுச்சீட்டு செல்லுபடியற்றதாகியுள்ளது என்று நாமல் ராஜபக்ஷ அதனை வெளியிட்டார்.

ஆனால் உலகின் எந்தவொரு நாட்டிலும் கடவுச்சீட்டு செல்லுபடியற்றதாக மாற்றப்படும் போது அதன்மீது ‘கன்செல்ட்’ என்றே குறிப்பிடப்படும். ஆனால் நாமல் ராஜபக்ஷ காண்பித்த கடவுச்சீட்டில் ‘கன்செல்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதிலிருந்து இது பொய்யான ஆவணம் என்பது தெளிவாகின்றது.

அதேபோன்று கோத்தாபயவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக் கொண்டமை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

ஆனால் அவ்வாறான ஆவணங்கள் எவையும் கையளிக்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே இது வெற்றிக்கும், தோல்விக்கும் இடையிலான பிரச்சினையல்ல.

ஏனெனில் கோத்தாபய ராஜபக்ஷ என்ன செய்தாலும் அவர் நிச்சயம் தோல்வியடைவார் என  அவர் இதன்போது தெரிவித்தார்.