ரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு

275 0

ரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு ‘தைமுர்’ உடல் நலக்குறைவால் இறந்தது.ரஷியாவின் விளாடிவோஸ்டாக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் ‘அமுர்’ என்ற பெயர் கொண்ட சைபீரிய புலி வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு இந்த புலிக்கு உணவாக ஆடு ஒன்றை பூங்கா ஊழியர்கள் கூண்டுக்குள் அனுப்பி வைத்தனர்.

ஆனால் அந்த ஆட்டை கடித்து குதறி சாப்பிடுவதற்கு பதிலாக அதன் மீது அன்பு மழை பொழிந்தது. ஆடும், புலியும் நட்பாக பழகின. இதை பார்த்து, ஆச்சரியம் அடைந்த பூங்கா ஊழியர்கள் அந்த ஆட்டை புலியுடன் தொடர்ந்து பழகவிட்டனர். அந்த ஆட்டுக்கு ‘தைமுர்’ என பெயரிட்டு பூங்கா ஊழியர்கள் அழைத்து வந்தனர்.

ஆடும், புலியும் விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பிரபலமாகின. ஆட்டுக்கு புலி மேல் சுத்தமாக பயம் இல்லாமல் போனதால் அடிக்கடி வம்பிழுத்து விளையாடி சண்டை போட்டது. புலி இதை பெரிதாக கண்டுகொள்ளாமல் விளையாடி வந்தது.

ஆனால் 2016-ம் ஆண்டு ஜனவரியில் ஆடு தன்னிடம் வம்பிழுத்து விளையாடியபோது பொறுமையை இழந்த புலி திடீரென ஆட்டை வாயில் கவ்வி தூக்கிவீசியது. இதனால் ஆட்டுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, பூங்கா ஊழியர்கள் ஆட்டையும் புலியையும் தனியாக பிரித்து வைத்து பாரமரித்து வந்தனர். அத்துடன் ஆட்டை தலைநகர் மாஸ்கோவுக்கு அனுப்பி வைத்து, சிறப்பு சிகிச்சை அளித்தனர். ஆனாலும் புலி தாக்கிய பாதிப்பில் இருந்து மீளாத ஆடு, தொடர்ந்து அந்த பூங்காவில் வாழ்ந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி உடல் நலக்குறைவால் தைமுர் ஆடு செத்து விட்டது. ரஷிய மக்கள் பலரும் தைமுர் ஆட்டுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.